திங்கள், 30 நவம்பர், 2015

தலைமைத்துவப்பண்பு (Leadership Quality)

நேற்றைய தினம் மற்ற நாட்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.

எங்கள் சர்ச்சில் இருந்து, ஐந்து இளைஞர்கள், உத்தமபாளையத்தில் இருக்கும் சர்ச்சுக்கு 'தலைமைத்துவப் பண்பு' பற்றிய பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தோம், எங்கள் ஃபாதருடன்.

நாள் முழுவதுமே நன்றாகச் சென்றது.
 30 இளைஞர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

 நேற்று நடந்தவற்றில், எனக்குப் பிடித்த சில விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எனக்குப் பிடித்த அழகான பாடலுடன்(தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீதானய்யா) பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

'தன்னைப் பற்றிய அறிமுகத்துடன்' பயிற்சியை ஆரம்பித்தார், மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து வந்திருந்த திரு.விஜய் அவர்கள்.

தலைவன் என்றால் யார் என்பதற்கு, பொது வாழ்க்கையில் மூவரை(சே குவேரா, அப்துல்கலாம் மற்றும் காந்தியடிகள்) எடுத்துக் காட்டாய் கூறினார்.

மதவாழ்க்கையிலும், நால்வரைப்(தூய பேதுரு, இயேசு, போப் மற்றும் மோசே) பற்றிக் கூறினார்.

நல்ல உரையாடல் நடந்தது.

தலைவன் என்பவன் மக்களை எவ்வாறெல்லாம் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், அவனுடைய நடத்தை, பண்பாடு, ஒழுக்கம் குறித்தும் விளக்கினார்.

நம்மை நாமே எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்?

  1. Self-motivated (External)
  2. Self-interest (Internal)
  3. Self-knowledge
  4. Self-talent
  5. Quality of life
மேற்சொன்ன ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினார்.

குறும் படங்கள் மற்றம் சில திரைப்படப் பாடல்கள் பகிரப்பட்டன.

இடையிடையே கதைகளும் கூறினார்.

நம்முள் நேர்மறை எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்;

எதிர்மறை எண்ணங்கள் உண்டாகாமல் எவ்வாறு நம்மை மெழுகேற்றிக் கொள்வது என்பதை, நகைச்சுவை கலந்த குரலில் அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.

'வளர வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
வாய்ப்புக்களை நீ தான் தேட வேண்டும்'

ஒரு மனிதனின் வலிமைகள், இயலும் தன்மைகள் பற்றி சிந்தித்தோம்.

ஆறு வகைகளாக அதைப் பிரித்திருந்தனர்.

அதில் கடைசியாகச் சொன்ன, சமுதாய வலிமையில் அவர் கூறிய ஒரு சொற்றொடர் அனைவரையும் சிந்திக்க வைத்தது.... 'யாருக்கு நாம் தேவையோ அவர்கள் நமக்கும் தேவை'.

'நான் யார்?' என்ற தலைப்பின் கீழ் 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்......'பாடலைக் கேட்டோம். அதில் அவர் கூறிய ஒரு கருத்து மிகவும் பிடித்திருந்தது.

'ஊரில் இருப்பவர்கள் மேல் பார்வை
உடன் இருப்பவர்கள் மேல் இருப்பதில்லை'

சிறந்த எடுத்துக்காட்டுகள் கொடுத்தார்.

எத்தனையோ நடிகர் நடிகைகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், தன் பெற்றோர், தன் உடன்பிறந்தோர், தன் அன்புக்குரியவர், தன் நண்பர் எனத் தன் உடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமா என்றால் பல நேரங்களில் இல்லை என்ற பதிலே வரும்.

நம் அருகில் இருப்பவர் தானே.. இவரைப்பற்றி என்ன தெரிந்து கொள்வது என்ற எண்ணமா?

இல்லை...

உடன் இருக்கும் போது, அவர்கள் அருமை தெரிவதில்லையா? என்பது புரியவில்லை.

யாருக்குமே ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. ஆனால், அது இல்லாத போது அவர்கள் மனம் படும் பாடு அவர்கள் மட்டும் அறிந்ததே...

என் தோழி,அவள் கணவர் அருகில் இருக்கும் போது, எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால், அவள் கணவர் வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டார் என்றால் 'அவள் ஃபோன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்....'.நான் கேட்பேன் அவளிடம் 'ஏன்டி பக்கத்தில் இருக்கும் போது, எப்ப பாரு சண்டை போட்டுட்டு இருக்க! ஊருக்குப் போனதும் எங்க இருந்து வந்துச்சுடி இந்தப்பாசம்? என்று'.

ஆகையால், எல்லாருமே ஒருவர் இல்லாத போது தான் அவரின் அருமையை உணர்கிறார்கள். பிடித்திருந்த செய்தி இது.


SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) –ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாய் அழகாய் விளக்கினார் பயிற்சியாளர்.

'படிப்பிற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை'- புதிதாய்த் தெரிந்த வரி.

படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இந்த வரி சற்று சவாலாக இருந்தது.

"நம் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அந்த இலட்சியங்கள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்; "என்று சமூக அக்கறைகளைக் குறித்தும் விளக்கினார்.

உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல... மன ஊனம் இருக்கக் கூடாது.

ஒரு பிரச்சனை என்றால், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல தலைவன் என்பவன் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவான் என்று கூறினார்.

உடல் மொழி குறித்து சில டிப்ஸ் கொடுத்தார்.

நன்றியுரையுடன் அன்றைய பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது.

பின் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இன்றைய நாளில், என் தோழியின் ஞாபகங்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
ஏனென்றால், அவள் கூறிய நிறைய வார்த்தைகள், நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தையும், இன்று கேட்டது போல் இருந்தது.

இன்றைய திருப்பலி ஒரு ஸ்பெஷலாக இருந்தது.

அன்றொரு நாள் என் தோழியுடன் நான் பங்கெடுத்த சிலுவைப்பாதைத் திருப்பலி போல் இன்றும் இருந்தது.

பாடல் பாடினேன்.

பக்தியில் நனைந்தேன்.

அனைவருக்காகவும் வேண்டினேன்.

மாலையில் வீடு திரும்பினேன்.

இன்றைய நாள் ஒரு அர்த்தமுள்ள நாளாகவே இருந்தது.

அதிசயமாக இன்று என் மம்மி 'இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?' என்று கேட்டார். நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். திருப்தியாக இருந்தது.

அங்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். புதுவரவு. புதுவரவு என்றாலே நிறைய விமர்சனங்களும் வரத்தானே செய்யும். நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயவற்றை விட்டுவிடுவோம்.

இப்போது...

நான் காயப்படுத்தியவர்களை, எண்ணிப்பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.

அருகில் இருக்கும் போது, நம் அன்பானவரின் அருமை தெரிவதில்லை.

அனுபவங்கள் பகிரப்படுவது பெருமிதத்திற்காக அல்ல....

அதில் ஏதாவது ஒரு வரி கூட படிப்பவரையோ கேட்பவரையோ பாதிக்காதா என்பதற்காகத் தான்..

என் கிறுக்கல்களையும் படித்து அதற்கு விமர்சனம் தரும் என் அன்புத் தோழிக்கு நன்றி!

இனிய காலை வணக்கங்கள்....










சனி, 28 நவம்பர், 2015

கோபம் சரியா?

நம் அம்மா நம்மிடம் நன்றாய்த் தான் பேசிக் கொண்டிருப்பார்.
திடீரென்று ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு பெரிய சண்டையில் போய் முடியும்.

"எனக்குத் தொல்லைக் கொடுக்காமல், போய்த்தொலைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு, நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று சொல்லுமளவுக்குக் கூட சண்டை வரலாம்.

அப்போது 'இந்த உலகில் என்னை அன்பு செய்ய யாருமில்லை. பெற்ற தாயே இப்படிப் பேசுகிறார் என்றால், மற்றவர் பேசுவதில் தவறொன்றுமில்லை' என்றெல்லாம் நம் மனதில், வீணான எண்ணங்கள் தோன்றும்.

அந்த நேரத்தில் தான் மனதில் உறுதி வேண்டும்.

கோபத்தில், யார் திட்டினாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அது அவர்களின் இயலாமையேத் தவிர, உண்மையாக நம்மைத் திட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது.

சில சமயம் நான் செய்வதுண்டு...

என் அம்மா என்னைஅடித்துவிடுவார்.

அவரைத் திரும்ப அடிக்க முடியாது.

அதனால், என்னை நானே மேலும் காயப்படுத்திக் கொள்வேன்.

என் கோபத்தை என்மீதே காட்டிக் கொள்கிறேன்.

இது தவறான செயல். எதற்காக நான் அடிக்கப்பட்டேன் என்பதை உணர்ந்து, நான் என்னைத் திருத்திக் கொண்டால், என்னை அடிக்க வேண்டிய அவசியம் என் அம்மாவிற்கும் இல்லை.

கோபப்பட்டு, என்னைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டியஅவசியம் எனக்கும் இல்லை.

கோபத்தில் அடி வாங்குவது கூட நல்லது.

ஆனால், அவர்களின் பேச்சு தான் நம்மை மிகவும் காயப்படுத்தும், வள்ளுவர் சொன்னது போல..
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'

காயப்படுத்துவது எளிது.
ஆனால், அதை ஆற்றுவது மிகக் கடினம்.

"நாம் சொல்வது அனைத்திற்கும் தலைஆட்டுகிறார் என்பதற்காக, ஒருவரின் மேல், நம் கோபம் அனைத்தையும் காட்டுவது மிகவும் தவறான செயல்."

கோபம் வரும் போது, நம் வாயிலிருந்து என்னென்ன சொற்கள் வருகின்றன என்று நமக்கேத் தெரியாது.

ஆனால், கோபம் குறைந்த பின், யோசித்துப் பார்த்தால், நம் மீது தான் தவறு இருக்கும்.

ஆனால், காயப்பட்டவர் நிலைமை அதே தான்.

அவர் காயத்தை எப்படி ஆற்றுவது?

ஒரு மன்னிப்பில் எல்லாம் முடிந்துவிடுமா?

இப்படி நம் மத்தியில் நிறைய கோபக்காரிகளும், கோபக்காரன்களும் இருக்கத்தான் செய்கிறோம்.

ஒருவரின் மேல் கோபப்படுவதற்கு முன், சில நொடிகளாவது சிந்திப்போம்.

அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

பெரும்பாலும், மேலானவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே, தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள்.

இது என்ன சமூக நியதியா?

அநியாயமாய்த் தோன்றாதா இந்த மேலானவர்களுக்கு?

'மேலானவர் - கீழுள்ளவர்' என் நண்பன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள்.

மேலானவர்கள், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
அவர்களைப் பகடைக்காய்களாக உபயோகிப்பதை நிறுத்திவிட்டு,
அவர்களும் மனிதர்கள்...

அவர்களுக்கும் கோபம் வரும்...

என்பதை நினைத்து...

நம் கோபத்தை மற்றவர் மீது காட்டுவதற்குமுன், சிந்தித்து செயல்படுவோம்.

கோபம் வரும் போது, நமக்குப் பிடித்தவரை(அல்லதுபிடித்தபெயரை), நினைத்துக் கொண்டால், குறைந்து விடும் என்று கூறுவார்கள்.

எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.

எனக்குப் பிடித்த ஒரு பெயர் உண்டு. அது, வெளியில் சொல்லமுடியாத பெயர். அதனால் மனதிற்குள் தான் சொல்லிக் கொள்வேன்.

கோபமில்லாத குணவதியாக வாழ,

முயற்சி செய்வோம்!

அன்பு வணக்கங்கள்!!!

இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இரு மடங்காகப் பெருகும்.








வெள்ளி, 27 நவம்பர், 2015

நன்றி கூறும் நாள்...

பரபரப்பான இந்த உலகில் மனிதர்களுக்கு நன்றி கூறுவதற்குக் கூட நேரம் இல்லை போல...

நேற்று தான், இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதே எனக்குத் தெரியும்.
நேற்று, நவம்பர் 26 ஆம் நாள், நன்றி கூறும் நாளாகக் கொண்டாடப்பட்டது.(Thanksgiving day).

இந்த நாளை எண்ணிப் பார்க்கும் போது, நான், மூவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவது என் ஆசான்... என் நண்பன்... என் எல்லாம்... என்று இருந்து, இன்று என்னோடு இல்லாத என் அருமைத் தோழன் இனியன். எனக்கு இந்த உலக விசயங்களை அறிமுகப்படுத்தி வைத்தது, என்னை வார்த்தெடுத்தது அனைத்தும் அவன் தான். எப்படிப் பேச வேண்டும்.... எப்படிப் பழக வேண்டும்..... எப்படி நடக்க வேண்டும்... இப்படி அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன். இந்த நாளில் அவனைச் சிறப்பாக நினைவு கூர்ந்தேன்.

இரண்டாவது என் மம்மி. மன்னிக்கவும். என் அம்மா. என் அம்மையை, அம்மா என்று அழைத்ததை விட மம்மி என்று அழைத்ததே அதிகம். மம்மி என்று அழைப்பதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்.

சிறு வயதில் என் அம்மாவிடம் அதிகமாக அடி வாங்கியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாகச் சமைப்பேன் என்று என் அம்மா கூறுவார். இப்போது தான் எந்த வேலையும் செய்வதில்லையே!!! அதனால், இப்போது நன்றாகச் சமைப்பதென்பது கடினம். நான், முதல் முதலாக என் குடும்பத்தைப் பிரிந்தது, கல்லூரிக்குச் சென்ற பிறகு தான். விடுதியில் தங்கிப் படித்தேன். அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வருவார்கள்.

முதல் முதலாக நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது, கல்லூரியில் பயிலும் போது தான். என் நண்பன் என்னிடம் பேசவில்லை என்று அவரிடம் கூறி அழுதேன். அன்று என் கண்ணீருக்கு ஆறுதலாக, என் தாய் மடி தான் இருந்தது.

விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம், தவறாமல் என்னை கடைக்கு அழைத்துச் சென்று, தேவையான அனைத்தையும் வாங்கித்தருவார். வாங்கித் தந்ததால் மட்டும் நன்றி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். வாங்கித் தரும் போது, அவர் முகத்தில் நான் கண்ட அந்த மகிழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கும்.

படித்து சில வருடங்கள் கழித்து, மறுபடியும் இப்போது என் பெற்றோருடன் இருக்கும் இந்நேரத்தில் என் அம்மாவின் பாசத்தை அளவிட முடியவில்லை.

உடல் நிலை சரியில்லாத போது என் அருகில் படுத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்வது...

மதிய உணவு பேக் செய்வது...

நான் அணியும் மிதியணிகளை எடுத்து வைப்பது...

என்னை வழியனுப்பி வைப்பது...

நான் கேட்காமலே என் தேவைகளை நிறைவேற்றுவது...

எனக்காக பலரின் அவப்பேச்சுகளுக்கு ஆளாவது..

எனக்கேத் தெரியாமல் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது...

இந்த நேரத்தில் எனக்கு அம்மை வந்த நேரத்தை எண்ணிப் பார்க்கிறேன். என்னால் எழுந்து அமர கூட முடியாத அந்த நேரங்கள்.. என் மம்மி இல்லை என்றால் நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைக்கும் போது, கண்களில் நீர் வழிகின்றது.

இப்படி எனக்காக, இத்தனை தியாகங்கள் செய்த என் அம்மாவிற்கு நன்றி கூறுவதில் எனக்கு மிகுந்த சந்தோசம். என் அம்மாவிற்கு வாழ்த்து கூறினேன்.

மூன்றாவது என் டாடி. என் மம்மி எனக்கு எந்த அளவிற்கோ, அந்த அளவிற்கு என் டாடியும் மறைமுகமாக என் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.

இந்த மூவரும் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவர்கள்.

நான் இப்போது இருப்பதற்குக் காரணமே இந்த மூவரும் தான்.

இவர்களுக்கு நன்றி கூறும் இந்நாளில், என் நண்பர்கள், என் உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூற ஆசைப்படுகிறேன்.

நாம் ஒவ்வொருவரும், ஏதாவது ஒருவகையில், ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்களே!!!




வியாழன், 26 நவம்பர், 2015

கார்த்திகைத் திருநாள்...


இன்று திருக்கார்த்திகைத் திருநாள்.

ஒளி இருக்கும் இடத்தில் இறைவன் என்றும் நிறைந்திருப்பான்.

இன்று, தீபங்களை ஏற்றும் போது மனதில் ஒருபுத்துணர்ச்சி பிறந்தது போல் தோன்றியது.

 பழைய உறவுகளைச் சந்தித்தேன். புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது, இந்நாள்.

ஒருவருக்காய் வாழ்வதைவிட, பலருடன் ஒன்றித்து வாழ்வது அதை விட மகிழ்ச்சியையேத் தரும்.

இந்த ஒளிநாளில் மற்றவரின் வாழ்விலும், என்னால் ஒளியேற்ற முடிகிறதா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அதற்காக சிறிதாவது முயற்சி எடுக்கிறேன்.

இறைவன் அருளால் அனைத்தும் நன்றாய் அமையும்.

இனிய காலை வணக்கம்.



புதன், 25 நவம்பர், 2015

குட்டிக் குறும்புகள்...

நான் சிறு வயதாய் இருந்தபோது, அதாவது இரண்டாம் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் நிறைய சிறு பிள்ளைகள் இருப்பார்கள். சனி ஞாயிறு என்றால் ஒரே ஆட்டம், பாட்டம் தான். தெருவே திருவிழா போலக் காட்சியளிக்கும். என் சிறுவயது நண்பர்கள் தேவி,பிரபு, ராஜி இன்னும் பலர்.

நாங்கள் பெரும்பாலும் விளையாடும் விளையாட்டு,ஓடிப்பிடித்து  இல்லையைன்றால் ஒளிந்து விளையாடுவது.

சிலநேரம் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, அதை ஓட்டிப் பழகி விளையாடுவோம்.

சிலநேரம் வீட்டிற்குத் தெரியாமல், சமையல் பொருட்களைத் திருடிக்கொண்டு வந்து தேங்காய் சரட்டையில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்து விளையாடுவோம்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துவிட்டு ஆலயத்திற்குச் செல்வது வழக்கம்.

வீட்டில் உட்கார்ந்து படித்த ஞாபகமும் இல்லை.
படிக்காமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் இல்லை.

எங்கள் தெருவில், துணிசலவை செய்யும் ஒரு தாத்தா இருப்பார். அவர், ஒரு குட்டி தள்ளுவண்டி வைத்திருப்பார். அதன் பக்கத்தில் செங்கல்களால் ஒரு வீடு கட்டி, அதற்குள் சில சாமி படங்களை வைத்து, அதற்கு சூடம் ஏற்றிக் கும்பிட்ட ஞாபகம் எல்லாம் இருக்கிறது.

அப்போது நான் என்ன ஜாதி என்று தெரியாது.

யாரிடம் மட்டும் பேசவேண்டுமென்று தெரியாது.

யார் வீட்டிற்கெல்லாம் செல்லக் கூடாது என்பது தெரியாது.

தெரு மட்டுமே எங்கள் சொத்து...

எந்நேரமும் தெருவில் தான் கிடப்போம்.

மதியவேளைத் தூக்கம் கூட அறிந்தது கிடையாது.

அந்த நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது.


நான் சைக்கிள் ஓட்டப் பழகியது அந்தத் தெருவில் தான்...

நான் ஓடியாடப் பழகியதும் அந்தத் தெருவில் தான்...

அழகான நண்பர்களைப் பெற்றதும் அந்தத் தெருவில் தான்...

அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது.


கடந்த காலம் எப்போதும் திரும்ப வராது. ஆனால், கடந்த காலத்தைப் போல் நம்மால் வாழ முடியும்.

எதைப் பற்றியும் நினைக்காமல் மகிழ்ச்சியாய், அமைதியாய், பொறாமை இல்லாமல், சண்டைசச்சரவுகள் இல்லாமல், போட்டி, பகை இல்லாமல் நம்மால் வாழ முடியும்.

அப்படி வாழும் போது, நிகழ்காலமும் கடந்த காலத்தைப் போல் மகிழ்ச்சியானதாய் அமையும்.








செவ்வாய், 24 நவம்பர், 2015

பிடிக்கவில்லை...

பேசிக் கொண்டிருக்கப் பிடிக்கிறது...
எழுதப் பிடிக்கவில்லை...

பகிர்ந்து கொள்ளப் பிடிக்கிறது...
பகிரப்படுவது பிடிக்கவில்லை...

அழப் பிடிக்கிறது...
அழ வைக்கப் பிடிக்கவில்லை...

நேசிக்கப் பிடிக்கிறது...
நேசிக்கப்படுவது பிடிக்கவில்லை...

மழையில் நனைவது பிடிக்கிறது...
மழையில் அழுவது பிடிக்கவில்லை...

பாடல் கேட்கப் பிடிக்கிறது...
அதன் வரிகள் பிடிக்கவில்லை...

இயற்கை இரசிக்கப் பிடிக்கிறது...
அதன் ஆணவம் பிடிக்கவில்லை...

அறிவுரை கூறப் பிடிக்கிறது...
அறிவுரை கூறப்படுவது பிடிக்கவில்லை...

காதல் பிடிக்கிறது...
காதலியாவது பிடிக்கவில்லை...

நட்பு பிடிக்கிறது...
போலி நண்பர்கள் பிடிக்கவில்லை...

காயங்கள் பிடிக்கிறது...
காயப்படுத்துவது பிடிக்கவில்லை...

முத்தம் பிடிக்கிறது...
அதன் ஈரம் பிடிக்கவில்லை...

அழகு பிடிக்கிறது...
அதன் கர்வம் பிடிக்கவில்லை...

குரல் பிடிக்கிறது...
அதன் குற்றப்பழி பிடிக்கவில்லை...

ஏக்கம் பிடிக்கிறது...
ஏங்கவைக்கும் தருணங்கள் பிடிக்கவில்லை...

மௌனம் பிடிக்கிறது...
உறைய வைக்குமளவிற்குப் பிடிக்கவில்லை...

சண்டை பிடிக்கிறது...
அது தொடர்ந்துகொண்டிருப்பது பிடிக்கவில்லை...

ஆக...
பிடிக்கும் ஒவ்வொன்றிற்குப் பின்னும்
பிடிக்காத ஒன்று இருக்கிறது...
இது
என் தவறு  அல்ல...




திங்கள், 23 நவம்பர், 2015

தாங்கக்கூடிய வலி...


ஒரு குட்டி உதாரணம். ஆற்றுநீரைச் சூடுபடுத்தினால், கலங்கிய தண்ணீர் அடியில் தங்கிவிடும். சுத்தமான நீரை எளிதாக, வடிகட்டியின் உதவியுடன் பிரித்து எடுத்துவிடலாம்.
இதில், ஒரு மிகப் பெரிய வாழ்க்கைத்தத்துவம் அடங்கி உள்ளது.
வாழ்க்கையில், நமக்கு துன்பமும் இன்பமும் கலந்து தான் இருக்கும். ஆனால், சூடுபடுத்துதல் என்ற சிலநேர சோகங்கள், கஷ்டங்கள் வரும் போது மனம் கலங்காமல் காத்திருந்தால் நம்மிலிருக்கும் கசடு என்ற துன்பங்கள் அடியில் தங்கிவிடும். அமைதி, மகிழ்ச்சி போன்ற நல்லவவைகளை எளிதாகப் பிரித்துவிடலாம்.

நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுதான் கஷ்டங்கள் வரும். அப்படியே உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான சக்தியை இறைவன் தருவார்.

எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்களா? என்று மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாதபோது பேசுவோம். ஆனால், அவரின் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, நாம் படும் துயரங்கள் சாதாரணமாகவே தெரியும்.

துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் அதைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை மட்டும் கொண்டிருப்போம்.
நம் துன்பங்களுக்கே இவ்வளவு சிரமப்படுகிறோம். பின் எப்படி மற்றவரின் துயரத்தைத் துடைப்பது?
எனக்குப் பிடித்த திரைப்படத்தில் வரும் வசனம் இது.... 'நம்ம ஆசையை நாமலே நிறைவேத்துறதுல என்ன kick இருக்கு? மற்றவர்கள் ஆசையை நிறைவேற்றதுல தான் உண்மையான kick இருக்கு'என்று வரும். அருமையான வசனம். எனக்குப் பிடித்த வசனமும் கூட. என் அறையின் ஒரு மூலையில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும் இதைஎப்போதாவது படிப்பதுண்டு.

இங்கு திருவள்ளுவரின் ஒரு குறள் ஞாபகம் வருகிறது..
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்'
துன்பம் வரும்போது,அதைக் கண்டு கலங்காமல் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அத்துன்பத்தை வென்றுவிட வேண்டும்.

முதலில் நம் துன்பங்களைக் களையத் துவங்குவோம்.

பின் மற்றவரின் துயர் துடைக்க சக்தி கிடைக்கும்.



சனி, 21 நவம்பர், 2015

மனத்தாங்கல்..


'உன் சகோதரனோடு ஏதாவது மனத்தாங்கல் இருந்தால் அவனுடன் முதலில் சமரசம் செய்து விட்டு, பின் உன் காணிக்கையைச் செலுத்து' என்று பைபிளில் ஒரு வசனம் இருக்கும். திருப்பலியில் பங்கு கொள்ளும் பொழுதெல்லாம், என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் 'நான் யாருடனாவது சண்டையிட்டுள்ளேனா என்று யோசித்துப் பார்ப்பேன்'. முக்கியமாக, என் தங்கையிடம் அல்லது என் மம்மியிடம் சண்டையிட்டிருந்தால், அவர்களுடன் சமாதானம் செய்த பின்பு தான் எனக்கு ஒரு திருப்தி இருக்கும்.

இன்று காலை டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர்  உரையாடிக் கொண்டிருந்தார். 'உங்களுக்கு யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் பின் எப்படி உங்கள் வேண்டுதல்களை இறைவன் ஏற்றுக் கொள்வார். உங்கள் அருகில் இருப்பவரையே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்படி இறைவனை ஏற்றுக் கொள்வீர்கள். அவர் எப்படி நீங்கள் கேட்பதைச் செய்வார் என்று நினைக்கிறீர்கள்?' என்று தொடர்ந்தார்.

எனக்கு சிறு வயதில் இருந்து யாருடனெல்லாம் மனத்தாங்கல் இருக்கிறதென்று யோசித்துப் பார்த்தேன்.

நான் ஒன்றாம் வகுப்பு படித்த பொழுது, என்னுடன் பயின்ற, என் அண்டை வீட்டுத் தோழி கீர்த்தனா. அவள் வீடு மாறிச் செல்லும் போது என்னிடம் சொல்லாமலே சென்றுவிட்டாள். அவள் மீது சிறு மனத்தாங்கல். ஞாபகம் தெரிந்த வயதில் நான் பிடித்த, முதல் தோழி அவள். அவள் என்னிடம் சொல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.

பின் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடன் பி.நித்யா என்.நித்யா என இருவர் படித்தனர். இருவருமே என் பெஞ்ச் தான். ஆனால் எங்கள் மூவருக்கும் அடிக்கடி சண்டை வரும். என்.நித்யா என்னைப் பொறுத்துக் கொள்வாள். பி.நித்யாவும் நானும் பேசாமலே பாதி நாட்களைக் கடத்திவிட்டேன். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் சமயம்.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் என்.நித்யாவிடம் சண்டை போட்டு, படிப்பு முடியும் வரை அவளுடன் பேசாமலே இருந்துவிட்டேன். அந்த இரண்டு நித்யாக்களிடமும் பேசி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்றுத் தோன்றியது.

காரணமே உணர்ந்து கொள்ளாமல், என் மீது அன்பு வைத்திருந்த ஒரு அம்மாவிடம் கோபப்பட்டு, இன்று வரை பேசாமல் மௌனமாய் இருக்கிறேன். இவரை நினைவு கூறும் பொழுதெல்லாம், நான் தவறு செய்துவிட்டதாய்த் தோன்றும். ஒருவேளை, நான் என் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசியிருந்தால் சரியான தீர்வு கிடைத்திருக்கும் என்று தோன்றியது.

என் தோழி, என்னைப் புரிந்து கொள்ளாமல், சட்டென்று 'நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா அல்லது அவளுக்கு வேறு நிறைய தோழிகள் கிடைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை!' இன்று வரை என்னுடன் பேசாமல் இருக்கிறாள். ஆனால், அவள் பிரிவு எனக்கு மிகுந்த வருத்தத்தையேத் தருகிறது. அது அவளுக்குப் புரியுமா என்று தெரியவில்லை!

மேற்சொன்னவர்களிடம், எனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்...

கீர்த்தனாவிடம் ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய்? நீ இல்லாமல் நான் மூன்றாம் வகுப்பு வரைத் தனியாய் தான் இருந்தேன் என்று கூறுவேன்.

என்.நித்யா பி.நித்யா இருவரிடமும் மனம் விட்டுப் பேசுவேன்.

என் அம்மாவிடம் என் சுகங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்வேன் முன்புபோல...

என் தோழியின் அருமையை உணர்வேன். அவளிடம் சண்டை போட மாட்டேன்.

இவை எல்லாம் நிறைவேறினால்.. கண்டிப்பாக என் மனதில், ஒரு திருப்தி கிடைக்கும் எனத் தோன்றுகிறது. என் அருகில் உள்ளவர்களிடம் முதலில் நான் மனத்தாங்கல் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பின் இறைவன் நம் தேவைகளைத் தானே முன் வந்து செய்வார்.

உங்களுக்கும் யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் சமரசம் செய்து விட்டு உறங்கச் செல்லுங்கள்.

நிம்மதியான தூக்கம் உங்களுக்கே!

வெள்ளி, 20 நவம்பர், 2015

சபிக்காதீர்கள்.


சாபம் - பெரும்பாலும் நாம் இந்தவார்த்தையை சண்டையிடும் போது கேட்டிருப்போம். அல்லது, வீட்டில் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது 'அவன் இப்படிச் செய்தான்...அவன் செய்தது தான், இப்போது, இந்தக் குடும்பத்திற்குச் சாபமாய் வந்து நிற்கிறது' என்று பேசுவார்கள்.சாபம் கொடுப்பதைப் பற்றியோ அல்லது சாபம் பெறுவதைப் பற்றியோ  எனக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை.

திடீரென எனக்கு இந்த வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என் நண்பர் என்னிடம் சொன்ன ஒரு வரிதான் இது. 'எனக்குசாபம் கொடுக்காதே!!' அதை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் சாபத்தைப் பற்றி இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அன்று அவன் அப்படி செய்ததால், நான் அவனைத் திட்டினேன். ஆனால், அது உண்மையாகும் என்று நினைக்கவில்லை. ஆனால் அது எப்படி நடந்தது?

பைபிளில் படித்த ஞாபகம். 'நான்கு தலைமுறைக்கு நாம் பெற்ற சாபம் நீடிக்குமென்று.'

எதனால் சாபம் பெறுகிறோம்?

எதனால் மற்றவரைச் சபிக்கிறோம்?

இதிலிருந்துவிடுதலை இல்லையா?

என் அம்மா அடிக்கடி கூறுவார் 'கிறிஸ்தவர்களுக்கெல்லாம் சாபம் பழிக்காது. இருந்தாலும் பெரியவர்கள் வாயில் விழக் கூடாது'

சாபத்தைப் பற்றிஅதிகம் தெரியாது. இருந்தாலும் இருவருக்கு மட்டும் ஒரு சிலவரிகள் கூற ஆசைப்படுகிறேன்.

ஒன்று சாபத்தைக் கொடுப்பவர்
யாரையும் சபிப்பதற்கு முன் 'அது தனக்கு வந்தால் எப்படி இருக்கும்? தன் குடும்பம் என்றால் நம்மால் தாங்கிக் கொள்ளமுடியுமா? தன் அன்பிற்குரியவருக்கு என்றால் நாம் பொறுத்துக் கொள்வோமா?' என்பதை யோசித்துப் பார்த்து, பின் மற்றவரைப் பற்றிப் பேசுவோம்.


இரண்டு சாபத்தைப் பெறுபவர்
நம்மை மற்றவர் சபிக்கிறார் என்று தெரிந்தும், வீண் பிடிவாதம் பிடித்தும், திமிர் கொண்டும் இருப்பது நல்லதல்ல. அவரைப் பொறுத்துப் போவோம். இல்லையென்றால், அந்த இடத்தில் இல்லாமல் இருத்தல் நல்லது.
மற்றவரின் சாபத்தால் நடந்த உண்மைகள் நிறையவே இருக்கின்றன. என் வாழ்விலும், நான் கண்கூடாக பார்த்த சம்பவங்கள் இருக்கின்றன.
அதனால் மற்றரைச் சபிக்காமலும், நாம் சாபம் பெறாமலும் இன்பவாழ்க்கை வாழ்வோம்.

இனிய காலைவணக்கம்.




வியாழன், 19 நவம்பர், 2015

ஆபத்துக் காலத்தில் உதவுபவனே...

"ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்"

நண்பர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், நாம் கஷ்டப்படும் காலங்களில் நமக்கு யார் உதவுகிறார்கள் என்பது தான் கேள்வி?
எங்கள் பள்ளியில் மயக்கம் போடும் ஆசிரியர், நான் ஒருத்தி மட்டும் தான். அதை எங்கள் பள்ளியில் அனைவரும் அறிவர். நேற்றும் அதைப்போல் தான். பள்ளியில் 40 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதைப் பார்த்ததும், எனக்கு உதவி செய்ய மூன்று ஆசிரியர்கள் முன் வந்தார்கள்.
அவர்களுக்கு நன்றி சொல்லஅப்போது எனக்கு நேரம் இல்லை.. ஆனால், அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கன்ஸலோ அனோன்ஸியா ஆசிரியர். என் உடன் பணியாற்றுகிறார். அவரை நான் எப்போதும் அம்மா என்றே அழைப்பேன். அழைப்பதற்கு ஏற்றார்போல் எனக்குத் தேவையான நேரத்தில், தேவையானஅறிவுரைகள் வழங்குவார். அவர் தான் நேற்று எனக்கு சாதம் ஊட்டிவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டார்.

கவிதா ஆசிரியர். இவர் தான் என் நெருங்கிய நண்பர் என்பது என் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய்த்தான் இருந்தோம். சில வேலைகள் காரணமாக இப்போது நாங்கள் இருவரும் சந்திப்பது சற்று குறைந்துவிட்டது. இருந்தும், எனக்கு ஏதாவது ஒன்று என்றால், இவள் துடிதுடித்துப் போய்விடுவாள். இவளை என் தோழியாகப் பெற்றது, நான் செய்த பாக்கியமே.

மூன்றாவது, எங்கள் பள்ளியின் நர்ஸ் மேம். எனக்கு எப்போது உடல் நிலை சரியில்லை என்றாலும், என் அருகில் இருந்து, என்னைப் பார்த்துக் கொள்பவர் அவர் மட்டும் தான். நான் எடுக்கும் வாந்தியைச் சுத்தம் செய்பவரும் இவர் தான். என் வீட்டிற்குத்  தகவல் சொல்பவரும், இவர் தான்.
இந்த மூவரும் நேற்று என் வாழ்வில் என் கடவுளாகவேத் தெரிந்தார்கள்.

இதுவரை பைபிளிலும், படங்களிலும் மட்டுமே பார்த்த இயேசுவை நேற்று இவர்கள் மூலம் பார்த்தேன். இன்றும் நேற்று நடந்த ஒவ்வொரு விசயமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நண்பர்களுக்கு உதவுவது என்பது இறைவனுக்கே உதவிசெய்வது என்பதை நேற்று உணர்ந்து கொண்டேன்.

என் ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்.

நன்றி நண்பர்களே!

புதன், 18 நவம்பர், 2015

அன்பே கடவுள் என்றால்...

'அன்பே கடவுள் என்றால் அன்பிற்கு ஈடேது சொல்'

அன்பு கடவுளா?

அன்பு செய்தலில் கடவுள் இருக்கிறாரா?

கடவுள் அன்பாய் இருக்கிறாய் என்றால்,
அன்பு செய்தலுக்கு ஈடானது எதுவும் இல்லை.

ஆதலால், அன்பு செய்தலின் மூலம், நாம் இறைவனைஅறிந்து கொள்ளலாம். இறைவனை நம் மூலமாக மற்றவரும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் அன்பு செய்வதற்கு எங்குநேரம் இருக்கிறது?

நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், மின்னஞ்சலிலும் மட்டும் அன்பு என்ற வார்த்தையைக் குறிப்பிட்டால் போதுமா?

நாம் அவரை அன்பு செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுமா?

கண்ணெதிரேக் காதல் எல்லாம் மறைந்து
கணினிக்காதல் பெருகிவிட்ட காலம்..

அன்பு என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்பவர்கள் தான் அனேகம். கணவன்-மனைவி, அம்மா-மகள்(ன்),  காதலன்-காதலி இவர்களுக்கு இடையில் இருப்பது மட்டும் அன்பு அல்ல.

அன்பிற்குப் பலமுகங்கள் உண்டு...

விட்டுக்கொடுத்தல்...

பகிர்ந்தளித்தல்...

உரையாடுதல்...

புன்சிரிப்பு...

நல்லஉறவு...

நல்லெண்ணம்...

பொறுமையோடிருத்தல்...

ஏற்றுக்கொள்ளுதல்...

இவை அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தான்.

நான் அன்பாய் இருக்கிறேன் என்று வெளியில் பீற்றிக் கொண்டிருப்பதால், ஒன்றும் பயனில்லை. உண்மையில், நாம் அன்பானவர் தானா என்று சுயபரிசோதனை செய்து பார்ப்போம்.

அன்பு செய்வது எவ்வளவு உயர்வானதோ
அதே அளவு உயர்வானது
அன்பு செய்பவரைக் கடைசிவரையில் ஒரே மாதிரியாக அன்பு செய்வது.

இன்ப இனிய இயேசுவே...
புனித அசிசியாரின் 'அன்பைப் பெற விரும்புவதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும் எனக்குஅருள்வீராக!' என்ற ஜெபத்தைப் போல், நானும் பிறருக்கு அன்பை அளிக்கவும், அந்த அன்பில் நிலைத்திருக்கவும் எனக்கு அருள்தாரும்.


இந்தநாள் என் வாழ்வின் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நாளாய் அமையட்டும்.


செவ்வாய், 17 நவம்பர், 2015

ஏமாற்றாதே!!!

'ஏமாற்றம்'– எல்லோர் வாழ்விலும், ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் அல்லது நடக்க இருக்கும். முக்காலத்தில் ஏதாவது ஒரு காலத்தில் நமக்கு நடக்க இருப்பது தான், இந்த ஏமாற்றம்.
ஏமாற்றத்திற்குக் காரணம் அறியாமையா?

அல்லது நாம் நம்பினர்வர்கள் மேல் வைத்த அன்பா?

பெரும்பாலான நேரங்களில், இரண்டாவது சொன்னது தான் காரணமாக இருக்கும்.

நமக்கு, மிக நெருங்கிய நண்பராக பல வருடங்கள் இருப்பார். ஆனால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தினால் தன் நண்பனைப் பற்றியே, மற்றவர்களிடம் தரக்குறைவாகப் பேசுவான்.உடன் பிறந்தவர்கள் கூட, சில நேரங்களில், சில சந்தர்ப்பங்களால் இப்படி ஏமாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வேலை செய்யும் இடத்தில் தொடங்கி...

நாம் காய்கறி வாங்கும் கடை...

பால் வாங்கும் இடம்...

ஆடைகள் வாங்கும் கடை...

உணவுப் பொருட்கள் விற்கும் கடை...

நகைக்கடை...

டீக்கடை...

பெட்டிக்கடை...

என எங்கும்

மலிந்து விட்டது, இந்த ஏமாற்றம் 'ஒன்று தான்'.
நாம், மற்றவரை ஏமாற்றும் போது, அது தெரிந்து செய்தாலும், இல்லை அறியாமல் செய்தாலும், நம் மேல் தவறு இல்லாதது போல் தான் தெரியும். இதுவே மற்றவரால் நாம் ஏமாற்றப்படும் போது தான், அதன் வலி தெரியும்.
ஏமாற்றம் இரண்டு வகைப்படும்.

ஒன்று: நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது
நமக்குக் கிடைக்காத ஒன்று, என்றாவது ஒருநாள், நம்மைத் தேடி வரும் என்ற நம்பிக்கையில், தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் சமாதானம், முதல் வகையான ஏமாற்றம்.

இரண்டு : மற்றவரால் ஏமாற்றப்படுவது.
இதுவும் இரண்டு வகைப்படும். ஒன்று தெரிந்தே ஏமாற்றப்படுவது. இரண்டாவது தெரியாமல் ஏமாற்றப்படுவது.

நீ சாப்பிட்டால், உனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன், என்று அம்மா சொல்லுவார்கள். அது மழைக்காலம். வாங்கித்தர மாட்டார் என்று நமக்கும் தெரியும். இருந்தும் அவரின் சொல் கேட்டு சாப்பிடுவோம். இது தெரிந்து ஏமாற்றப்படுவது. இதனால் பெரிய தவறொன்றும் இல்லை.

இரண்டாவது...தெரியாமல் ஏமாற்றப்படுவது.
கடைக்குச் செல்கிறோம். இருநூறு ரூபாய்க்குப் பொருட்கள் வாங்குகிறோம். பணத்தைக் கொடுக்கும் போது, அதில் இரண்டு நூறு ரூபாய் தாள்களுக்குப் பதில் மூன்று தாள்கள் இருந்திருக்கிறது. அதை நாம் கவனிக்காமல் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டோம். ஆனால், அவர் அதைப் பார்த்தும் நம்மை ஏமாற்றும் நோக்குடன், அதைத் தன் காசுப்பெட்டியில் போட்டுக் கொண்டாரென்றால்.. அது தான் நமக்கேத் தெரியாமல் நம்மை ஏமாற்றுவது.

இந்த ஏமாற்றம் நாம் செய்யும் போது நன்றாய்த் தான் இருக்கும்.
நமக்கும் அந்த நிலைமை வரும் போது தான் அதன் வலியை உணருவோம்.
ஆதலால்.. பிறரை மனதளவில் கூட ஏமாற்ற நினைக்காதீர்கள்.

ஒரு பிடி அளவே உள்ள இந்தச் சிறிய இதயம் எவ்வளவு துன்பங்களைத் தான் தாங்கும்?

திங்கள், 16 நவம்பர், 2015

புனித பிரான்ஸிஸ் சவேரியாரே....

 அன்புள்ள புனித
பிரான்ஸிஸ் சவேரியாரே....

என் அறைத் தோழரே...

தினமும் காலையில் நான் யாரை நினைத்து எழுந்தாலும்..

என் கண்முன் தெரிவது என்னவோ நீங்கள் தான்...

உம்மைப் பார்த்து விடிந்தபொழுதுகள் எல்லாம்
உம் உருவம் மட்டும் தான் என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது...

உமது விருதுவாக்கை தினமும் வாசிக்கிறேன்..

உம் சாந்தமுகத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறேன்..

உம் நெஞ்சில், நீர் தாங்கிக் கொண்டிருக்கும்
இயேசுவின் சிலுவைமரத்தைப் பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் நீர் வழிகின்றது...

உலகம் முழுவதையும் நான் ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை...

என் மனம் மட்டும், எனக்கு ஆதாயமாக இருந்தால் போதும்;...

அது படும் பாடு, நீர் அறிந்த ஒன்றே...

நான் அழும் வேளைகளில் எல்லாம்
ஏதோ, நீர் எனக்கு ஆறுதல் அளிக்க வருவது போல் தெரியும்..

என் இன்ப நேரங்களிலும் உம்மிடம்
நான் எதையாவது உலரிக் கொண்டிருப்பேன்...

என் புலம்பல்கள் அனைத்தையும், நீர்
அமைதியுடனும்...

சகித்துக்கொண்டும்...

பொறுத்துக் கொண்டும்...

கேட்பது எனக்கு ஆறுதலாக உள்ளது...

இந்த நாட்களில் எனக்கு உற்றதுணையாக இருக்கும் நீரே
என் காவல் தூதர்...


சனி, 14 நவம்பர், 2015

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!!!

தெவிட்டா தேனமுதங்களே...
இன்பக் களஞ்சியங்களே...
உங்கள் பங்களிப்பு, எங்கள் வாழ்வின் சொத்து...
திட்டுவது மட்டும் எங்கள் கடமையல்ல...
உங்கள் வாழ்க்கையைத் தித்திக்க வைப்பதும், எங்கள் கடமைதான்..
உறங்கச் செல்வதற்கு முன்,
எங்கள் கண்முன் வருவது நீங்கள் மட்டும் தான்..
எங்கள் உறக்கங்களை, உங்களுக்காகத் தியாகம் செய்கிறோம்...
முப்பது பிள்ளைகளுக்குத் தாயாகும் பாக்கியம் எங்கு கிடைக்கும்?
அந்த வரத்தைக் கொடுத்தது...நீங்கள் தானே?
உங்களை எங்கள் பெறாத பிள்ளைகளாக
நாளும் பேணிக் காப்போம்!
இனியகுழந்தைகள் தினநல்வாழ்த்துகள்!!!

வியாழன், 12 நவம்பர், 2015

பணம் பத்தும் செய்யும்...


இரண்டு தின விடுமுறை...சற்றே வேலையாக இருந்து விட்டேன். அதனால் தான், என்னால் எதுவும் எழுதமுடியவில்லை.. ஆனால், இந்த இரண்டு நாட்களுமே நிறைய எனக்குக் கற்றுக் கொடுத்தன. நிறைய நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கு மிகவும் நெருக்கமான, என் தோழியிடம் உரையாடினேன். தீபாவளி வாழ்த்து சொன்னதும், அவள் அழும் சத்தம் கேட்டது. ஏன் அழுகிறாய் என்று கேட்டேன். அவள் சொன்ன ஒரே வார்த்தை 'பணம் பத்தும் செய்யும் ஜெனி. பணம் இருந்தால் தான் பெற்றோர், உறவினர், கணவன் எல்லாம் மதிப்பார்கள்' என்று கூறினாள். நாம் கல்லூரியில் படித்த போது பணத்தைப் பார்த்துத் தான் பழகினோமா? என்று நான் கேட்டேன்.
 "அது விவரம் தெரியாத வயசு. இப்போதெல்லாம் பணம் தான் எல்லாம்" என்று சொன்னாள்.வேறு யார் இந்தவார்த்தையைச் சொல்லியிருந்தாலும் ,எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்காது. அவள் சொன்னது தான் ஆச்சரியம். 10 வருடங்கள் காதலித்து,காதலித்தவரையே கரம் பிடித்தவள். வீட்டின் செல்லப்பிள்ளை. இவளுக்கே, இந்த நிலைமையா?எங்காவது ஓடிவிடலாம் போல் இருக்கிறது, என்று கூறினாள். மிகவும் வருத்தமாக இருந்தது.
எனக்கும், என் நண்பனுக்கும் இடையில் பணத்தைப் பற்றிய பட்டிமன்றம் நடக்கும். அவன், திட்டமிட்டு செயல்படுபவன். நான், கிடைப்பதை எல்லாம் செலவு செய்பவள். நான் அவனைக் கஞ்சன் என்று திட்டுவது வழக்கம். "பணத்தின் அருமை" என்று அறிவுரையைத் தொடங்கிவிடுவான்.
பணம் - பணத்தைப் பற்றிய என் அபிப்பிராயம் இதுதான்.
 பணம் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் பணத்துடன் மட்டுமே இருந்து விடலாம். பின் ஏன் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், சுற்றம்?வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால், அளவுக்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சுதானே? அதையும் ஞாபகம் வைத்துக் கொள்வோம்.
குறைவான பணத்துடன், வாழ்க்கையை இனிமையாக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.
நிறைவான பணத்துடன், மனஅமைதி இல்லாமல் இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு,
மனித மனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.


என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் இந்த அகிம்சைப் போரை!!!!

திங்கள், 9 நவம்பர், 2015

பதறாத காரியம் சிதறாது...

கடந்த இரண்டு நாட்களாக, உடன் பணிபுரியும் நண்பர்களுடன், உல்லாசப் பயணம். மதுரை அருகிலுள்ள செசி இல்லத்தில் தான் இந்த இரண்டு நாட்களும். பயணம் இனிதே நிறைவுற்று நேற்று மாலை வீடு திரும்பினோம். இரண்டு நாட்கள் ஒரேஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். என்ன தான் உடன் பணிபுரிபவர்களுடன் சென்றாலும், நண்பர்களுடன் செல்வதைப் போல் வராது,என்பதை, இந்தச் சுற்றுலா எனக்கு உணர்த்தியது. நன்றாய்த் தான் இருந்தது. இருந்தும், ஏதோ ஒரு வகையான உணர்வு. இந்தச் சுற்றுலாவில் நிறையவே கற்றுக் கொண்டேன். அவற்றில், நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.

நிறைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்திலும் கலந்து கொண்டேன். ஆனால் வெற்றி பெறவில்லை. அனைத்திலும் எங்கள் அணி தான் முன்னிலையில் இருக்கும். கடைசித் தருணத்தில், என்னுடைய பதட்டத்தினால் எல்லாம் வீணாய்ப் போய்விடும். இப்படித் தான், மூன்று முறையும் முதல் இடத்தை இழந்துவிட்டோம். அப்போது, ஒருஆசிரியை எனக்கு அறிவுரையாகச் சொன்னதுதான் இன்றைய தலைப்பு.
"நாம் எவ்வளவு தான் அறிவாளியாகவோ, ஞானியாகவோ இருந்தாலும் பதறாமல் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றிபெறும்". என்று அவர் கூறிய அறிவுரைதான், நான் இன்று எனக்காய் எடுத்துக் கொள்ளும், ஒரு வாழ்க்கைத் தத்துவம்.
அழகான வாக்கியம் 'பதறாதகாரியம் சிதறாது'
நமக்கு இழப்பு நேர்ந்தாலும், நம் அன்புக்குரியவர் நம்மை விட்டுச் சென்றாலும், நமக்கே எப்போதும் துன்பம் வந்து கொண்டிருந்தாலும், பதறாமல் அனைத்தையும் எதிர்நோக்கும் தைரியத்தை மட்டும் மனதில் நினைத்து,
அதன்படிசெயல்பட்டால் நாமும் வெற்றியாளர் தான்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

ஈகோ...


இந்தச் சொல், என் தோழியின் கணவர் அடிக்கடி அவளைப் பார்த்து சொல்லும் ஒருவார்த்தை. இன்று இந்த வார்த்தையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் போல் தோன்றியது. உடனே அகராதியை எடுத்து, அதன் தூய மொழிபெயர்ப்பு என்ன என்று பார்த்தேன். 'தற்புகழ்ச்சி அல்லது தற்பெருமை'. அதாவது, தான், தனது என்று தான் செய்வது மட்டுமே சரி என்று நினைப்பவர்கள். அகம்பாவம் பிடித்தவர்கள் என்று கூட சொல்லலாம்.
காதலர்களுக்கு இடையில் அடிக்கடி வருவது. ஆனால், சமரசம் செய்து கொள்வது தான் எப்படி என்றுத் தெரியாமல் பிரிந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான பிரச்சனைகளைப் பேசி மட்டுமே தீர்க்க முடியும் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லுவார். ஆனால், பேசுவதற்குக் கூட இடம் கொடுக்காமல் தடுப்பது தான் இந்தஈகோ.

ஈகோ–நமது மகிழ்ச்சியை நம்மிடம் இருந்து எடுத்து விடும்
ஈகோ–சிலநேரம் நம்மையே அழித்துவிடும்
ஈகோ–நம் இனியவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடும்

ஈகோ–இருப்பது தவறல்ல. ஆனால், அதற்கு இடம் பொருள் ஏவல் அவசியம்.நம் குடும்பத்தினருடன், நம் நண்பர்களிடம், நம்மை அன்பு செய்வர்களிடம், நம் அண்டை வீட்டாரிடம், நம் உறவினர்களிடம் ஈகோவைத் தள்ளி வைத்துவிட்டுப் பழகுவோம். என்றும் உன் அருகில் தேவதைக் கூட்டம் நிரம்பி வழியும்.

நாமும் ஈகோ இல்லாமல் வாழ இன்று சிறப்பாக ஒரு முயற்சி எடுப்போம்.

வியாழன், 5 நவம்பர், 2015

நல்லவனாய்(ளாய்) இருக்கமுடியாதா?


திருவிவிலியத்தில்(பைபிளில்) ஒரு அழகான கதை இருக்கிறது. ஒரு நிலக்கிழார், தன் திராட்சைத் தோட்டத்தில், வேலைக்கு ஆள்களை அழைப்பதற்காக, விடியற்காலையிலே எழுந்து வெளியே செல்வார். ஒரு நாளைக்கு, ஒரு தெனாரியம்(அவர்கள் ரூபாயின் மதிப்பு- உதாரணத்திற்கு 100 ரூபாய் என்று எடுத்துக் கொள்வோம்) வீதம் தருவதாக ஒப்புக் கொண்டு சிலரைத் தன் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் பின், ஒன்பது மணிக்கும் வெளியே சென்று சந்தை வெளியில் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு, நீங்களும் என் தோட்டத்திறகுச் சென்று வேலை செய்யுங்கள். உங்களுக்கு நியாயமான கூலியைத் தருவேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். இதேபோல், பன்னிரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும், ஐந்து மணிக்கும் முறையே வெளியே சென்று வேலையாட்களைத் தன் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். 
மாலையானதும் தன் மேற்பார்வையாளரிடம் (சூப்பர்வைசர்) ,வேலையாட்களை அழைத்து கடைசி வந்தவர் தொடங்கி, முதலில் வந்தவர் அனைவருக்கும் கூலியைக் கொடுக்கும் படி பணித்தார். 
ஐந்து மணியளவில் வந்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுக்கப்பட்டது. அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் எனத் தங்கள் மனதில் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கும் 100 ரூபாயே கொடுக்கப்பட்டது. 
கடைசியில் வந்தவர்கள் தங்கள் கூலியைப் பெற்றுக் கொள்ளும் போது, அந்த நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில் ஐந்து மணிக்கு வந்தவர்கள் ஒருமணி நேரமே வேலைசெய்தனர். காலை முதல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலைசெய்த எங்களையும் இவர்களோடு இணையாக்கி விட்டீரே" என்று புலம்பினர். 
அந்தத் தோட்டத்து உரிமையாளரோ, அவர்களைப் பார்த்து...." நண்பரே...நான் உனக்குத் துரோகம் செய்யவில்லை. நீர் என்னிடம் 100 ரூபாய்க்குத் தான் வேலை செய்ய ஒப்புக் கொண்டீர். 'உமக்குரிய ஊதியத்தை நான் கொடுத்து விட்டேன்.பெற்றுக் கொண்டுபோய்விடும். உமக்குக் கொடுத்தது போலவே கடைசியில் வந்தவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை என் விருப்பப்படி கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? நான் நல்லவனாய் இருப்பதனால் உமக்குப் பொறாமையா?'" என்று அந்தநிலக்கிழார் கூறுவது போல் கதை முடிவு பெறும்.
இந்தக் கதை, திடீரென என் மனதில் ஒரு உந்துதலை ஏற்படுத்தியது. 
இதில் நான் புரிந்து கொண்ட விசயம், ஒன்றே ஒன்று தான். "அந்தத் தோட்டக்காரர் தன்னுடையதைக் கொடுக்கிறார். தான் கூறியபடியே முதலில் வந்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டார். மற்றவருக்கும் கொடுப்பது அவர் விருப்பம்.
அவர் நல்லமனதைக் காட்டுகிறது."
இந்தக் கதையின் அர்த்தத்தை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு தியானித்திருந்தால் என் வாழ்வில் சிலமாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்றுதான் தோன்றியது.
நம் வாழ்விலும், பலநேரங்களில் நமக்கும் எல்லாம் கிடைக்கும். இருந்தும், அவளுக்கு இது கிடைத்துவிட்டதே..

"அவள் படிக்கவே மாட்டாள்.. அவளுக்குஅரசாங்கவேலைகிடைத்துவிட்டதே..

அவள் அழகாய் இருக்கவே மாட்டாள்.. அவளுக்கு அழகான கணவன் கிடைத்து விட்டாரே...

அவன் சிறதும் உழைக்காமல் எப்படி இவ்வளவு வசதிகளுடன் வாழ்கிறான்.. நானும் படாத பாடுபட்டு உழைக்கிறேன், என்னால் சொந்த நிலம் கூட வாங்க முடியவில்லையே...


அவன் செய்வதெல்லாம் தீமை. ஆனால் அவனுக்கு மட்டும் நல்லது நடக்கிறதே..."

என்று நம் மனம் சிலநேரம் அங்கலாய்க்கும்.
இதில் கூட இறைவனின் விருப்பம் தான் இருக்கிறது.
இந்தக் கதையில் வரும் நிலக்கிழார் தான் இறைவனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

இறைவனும் நமக்கு வாக்களித்த கூலியை நமக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். நம் கூலியை முழுமையாக அனுபவிப்பதை விட்டுவிட்டு 'அடுத்தவர் கூலி என்னை விட அதிகமாக இருக்கிறதே.. அதை எப்படி எனதாக்கிக் கொள்ளலாம். அல்லது அவரிடமிருந்து எப்படி அதைப் பெற்றுக் கொள்ளலாம்' என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு, இன்று இந்த நொடியை நான் எப்படிவாழ்கிறேன் என்பதில் நம் மனத்தைச் செலுத்துவோம்.
எதையும் கொடுப்பதில் தான் இன்பம்!
பெறுவதினால் துன்பமே.

புதன், 4 நவம்பர், 2015

ஏக்கம்...

ஏக்கம் என்ற வார்த்தை.. உபயோகிக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
அம்மா தன் குழந்தைக்கு ஒரு விலை உயர்ந்த பொம்மையை வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொன்னபின் அந்தக் குழந்தை, அந்தக் கடையில் இருக்கும் பொம்மையைப் பரிதாபத்துடன் பார்க்கும், தனக்கு அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில்.....இது ஒரு வகையான ஏக்கம்.
சிலருக்கு மற்றவரைப் போல் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம். சமீபத்தில் பெண்களுக்காக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர் ஒருபெண். அந்தக் கூட்டத்தில் இருந்த என்னுடைய தோழி, இருந்தால் இவங்கள மாதிரி இருக்கனும். ஏப்படிபேசுறாங்க பாரு, எப்படி இருக்காங்க பாரு, எப்படி இவங்களால மட்டும் இப்படி இருக்க முடிகிறது? என்று அவர்கள் புராணமே பாடிக் கொண்டிருந்தாள். எனக்கு கோபம் வரவில்லை. உடனே சிந்திக்கத் தொடங்கி விட்டேன். ஏன் நமக்கு மற்றவரைப் பார்க்கும் போது இவரைப் போல் இருந்தால் நன்றாய் இருக்கும் என்றோ, இவரைப் போல் நாம் இல்லையே என்றோ எண்ணத் தோன்றுகிறது? இதுவும் ஒரு வகையான ஏக்கம் தானே?
என்னைப் பொறுத்தவரை ஏக்கம் என்பது.. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்குஆசைப்படுவது. ஏன்? நாம் நாமாக இருந்தால் நன்றாய் இருக்கமாட்டோமா? ஏன் மற்றவரின் பிம்பமாக இருக்கஆசைப்படுகிறோம். மற்றவரைவிடநான் எல்லாவற்றிலும் சிறந்தவள் என்ற எண்ணம் நமக்குள் வரும்போது, கண்டிப்பாக என்னால் எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணரமுடியும். 
ஏக்கம் இருக்கலாம். உன்னால் சாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றி ஏக்கம் கொள். வீணாக அடுத்தவரைப் பார்த்து ஏக்கம் கொள்ளாதே!
ஏக்கம் கொள்!!!

பயம்...


சிலருக்குப் பேய் என்றால் பயம். ஒருசிலருக்குப் பேசுவதுஎன்றால் பயம். மற்றும் சிலருக்குப் பாடுவதுபயம். சிலர் கூட்டத்தைக் கண்டால் பயப்படுவர். இப்படிபயமும் பலவகை. பயப்படுபவர்களையும் நாம் வகைப்படுத்தலாம். இன்றுசிலவயதானவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்புகிடைத்தது. என்னதான் நம் வயதொத்தவர்களுடன் இருக்கும் போதுஅரட்டை, பேச்சு என்று போனாலும் வயதானவர்களுடன் பேசும் போது அவர்கள் அனுபவங்களையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் புரிந்துகொள்ள ஒருவாய்ப்பாக இருக்கிறது.
அந்தப் பாட்டி,ஒருகிராமத்திலிருந்து வேலைக்குச் செல்பவர். தனது மூத்தமகளின் இரண்டு பெண் குழந்தைகளையும், தன்னுடன் வைத்துவளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் ஊரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். திட_ரென தனது தெருவில் நடப்பவற்றைப் பற்றிச் சொன்னார். நானும் என் மூன்று பெண் பிள்ளைகளையும், இதேஊரில் தான் வளர்த்துதிருமணம் செய்துவைத்தேன். அன்றெல்லாம் பத்துமணிக்குக் கூட வெளியில் பயமில்லாமல் கடைக்குச் சென்றுவருவார்கள் என் பிள்ளைகள். அப்படித் தான் என் பிள்ளைகளைவளர்த்தேன். இன்றுஎன் பேரப்பிள்ளைகளைவெளியில் அனுப்பவதற்குஅவ்வளவுபயமாக இருக்கிறது. தெருவில் அப்படிஒருஅயோக்கியத்தனம் பெருகிவிட்டதுஎன்றுத் தன் ஆதங்கத்தைஎன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அவர் கூறியஒருசொற்றொடர் தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 'அந்தக் காலத்தில் பேயைக் கண்டுபயப்படுவார்கள். இந்தக் காலத்தில் மனிதனைக் கண்டுபயப்படவேண்டியநிலைமைவந்துவிட்டது'என்றுஅவர் கூறியஒரே ஒருசொற்றொடர் தான். ஆனால் எவ்வளவுபெரியவிசயத்தைதன்னுள் அடக்கியுள்ளவார்த்தை.
அந்தக் காலத்தில் பேய் என்றஒன்றைநினைத்துப் பயந்தமனித இனம்.. இன்று...மனிதனைக் கண்டேபயப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?
இதைப்பற்றிஎழுதஆரம்பித்தால் ஒருபுத்தகமேஎழுதிமுடித்துவிடலாம். பேசஅவ்வளவு இருக்கிறது. பேசுவோம்.இன்றுநான் மனிதனாகமற்றவரிடம் நடந்துகொள்கிறேனா? மற்றவரையும் என்னைப் போல் நினைக்கிறேனாஎன்றசிந்தனையைமட்டும் நம் மனதிற்குள் எடுத்துயோசிப்போம்.
இனிய இரவுவணக்கம்.

The Alchemist

Impressed lines from "The Alchemist"....

If you can concentrate always on the present, you’ll be a happy man


My present has arrived, and it’s “You”


If I am really a part of your dream, you’ll come back one day


Love required them to stay with the people they loved


Remember that wherever your heart is, there you will find your treasure


Love never keeps a man from pursuing his destiny


One is loved because one is loved. No reason is needed for loving.