ஞாயிறு, 31 மே, 2020

கடக்கும் நாட்கள்....

கொரோனா கொரோனா என்று
மார்ச்சில் ஆரம்பித்த நாம்
இரண்டு மாதங்களைக் கடந்து விட்டோம்...

ஆரம்பத்தில் மிகுந்த பயம்...
இருவேளைக் குளியல்...
சத்தான உணவு
என்று நாட்கள் சென்றன...

போகப் போக பழைய நடைமுறையே புழக்கத்தில் வந்து விட்டது...

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை என்று தான் நான் சொல்வேன்...

விவசாயி கூடத் தன் காய்கறிகளை தெருவில் சென்று விற்று விடலாம்...

பள்ளிக்குச் செல்லாமல் ஆசிரியர் எப்படித் தன் மாணவர்களைச் சந்திப்பது?

Online வகுப்பு என்று ஆரம்பித்து ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது தான் மிச்சம்.

இறைவா... 
நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்...
நாங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய ஜுன் மாதமாவது எங்கள் மீது கருணை புரியும்...

இனியபாரதி. 

உணர முடியா...

உணர முடியா தூரத்தில்
மலரும் பனியும்

இனி இணைவது கடினம் தான்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 29 மே, 2020

உன் பொறுப்பு...

நீ மகிழ்ச்சியாகவோ

துக்கமாகவோ

சோர்வாகவோ

நம்பிக்கையுடனோ

இருப்பது உன் கையில் தான் உள்ளது....

உன் வேலைகளை ஒருபோதும் தள்ளிப் போடாதே...

நாளை முடிக்க வேண்டிய வேலை என்றால்
நேற்று முன்தினமே முடித்திருக்க வேண்டும்....

இப்படி வேலை செய்வது மிகவும் கடினம் தான்...

ஆனால்... ஒரு முறை முயற்சித்துப் பார்... 
உன் வாழ்வில் பல வெற்றிகள் குவியும்...

சோர்வோ கலக்கமோ வர வாய்ப்பில்லை....

இனியபாரதி. 

வியாழன், 28 மே, 2020

அழகிய வாழ்வு...

இறைவன் கொடுத்த
இந்த
அழகிய
இனிய
அன்பு நிறைந்த
வாழ்க்கையை
நாமும்
இரசித்து ருசித்து
மனமகிழ்ச்சி உடன் 
வாழ்வோம்!!!

இனியபாரதி. 

புதன், 27 மே, 2020

அதிசய அன்பு...

காலைக் கதிரவனின் ஒளி
நம்மை எழுப்பும் வரைத்
தூங்கவிடும் அன்னையின் அன்பு...


பிடித்ததை வாங்கிக் கொடுத்து
கஷ்டம் அறியா வண்ணம்
வளர்க்கும் தந்தையின் அன்பு...

என்னை எவ்வளவு வேண்டுமானாலும்
இரசித்துக் கொள் என்று
தன் அழகைக் காட்டும்
காலை மலரின் அன்பு...

என்னைப் பிடிக்கவில்லை என்றாலும்
உன்னைப் பற்றிக் கொண்டு
உன்னை நனைப்பேன் என்று
அடம் பிடிக்கும் மழையின் அன்பு...

பொழுது சாயும் நேரம்
அழையா விருந்தாளியாய் வந்து
வருடிவிட்டுச் செல்லும்
இளந்தென்றலின் அன்பு...

இரவு ஜாமத்தில்
ஜன்னல் வழியாய்
என் கண்களுக்குக் களிப்பூட்டி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைக்கும்
விண்மீன் கூட்டத்தின் அன்பு...

எல்லாவற்றையும் விட
என்னிடம் இருந்து விடைபெறத் துடிக்கும்
அவளின் அன்பு...

இனியபாரதி. 

செவ்வாய், 26 மே, 2020

அன்பளிப்பு...

அவள் கொடுக்கும்
ஒரு குட்டி ரோஜா மலர் கூட
மிகப் பெரிய பரிசு தான் எனக்கு!!!

இனியபாரதி. 

திங்கள், 25 மே, 2020

மலர் செண்டு...

பலவகைப் பூக்களின் தொகுப்பு
நமக்குப் புத்துணர்ச்சி ஊட்டி
அனுதினமும் நம்மை மகிழ்விக்கின்றன!!!

எல்லாம் ஒரே வகைப் பூவாய்
எல்லாம் ஒரே நிறமாய் இருந்தால்
இரசிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்!!!


அதைப் போலத் தான்...
ஆண்கள் மட்டுமோ...
பெண்கள் மட்டுமோ...

இருந்தால் இவ்வுலகில் மகிழ்ச்சி இருக்காது...

ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் போது தான்
குடும்பம் என்ற மலர் செண்டு மணம் வீசும்...

So we conclude that there is no master. We are slaves to each other. 

இனியபாரதி. 

ஞாயிறு, 24 மே, 2020

வண்ணமான எண்ணம்...

வண்ணத்துப்பூச்சியின் நிறத்தை
ஒரு வண்ணத்திற்குள் அடக்கி விட முடியாது...

உன் எல்லையையும் ஒரு கோடு வரைத்து 
அடக்கி விட முடியாது...

நீ எல்லையற்றவன்...

உன் முடிவு உன்னால் மட்டுமே முடிவு செய்யப்படும்...

இனியபாரதி. 

சனி, 23 மே, 2020

ஓசை கேட்டு...

அவள் பேசுவது கூடத் தெரியாது
ஆனால்...
அவன் மட்டும் பதிலளிப்பான்
ஒரு மணி நேரமாய்!!!

அலைபேசிக் கொஞ்சல்கள்!

இனியபாரதி.


வெள்ளி, 22 மே, 2020

அவள் என்ற மாயை...

கொஞ்சம் பிடிக்கும் என்று ஒதுக்கி விட்டால்
நான் என்ன செய்ய???

நீயே உலகம் என்று நினைக்கும் அவனை நினைக்காமல்
தவிக்க விட்டுச் செல்கிறாயே?

உன் கவலையும் தவிப்பும்
அவனுக்குக் கிடையாதா?

உன்னைப் பிரிந்த ஏக்கம் 
அவனுக்கு இருக்காதா?

ஒன்று
முழுவதும் கொடு...
இல்லை 
விலகிச் செல்...

மாயை என்று எண்ணி 
உன்னை மறக்க நினைப்பான் அவன்!!!

இனியபாரதி.




வியாழன், 21 மே, 2020

கனவின் விளிம்பில்...

பலகோடி இளைஞர்கள்
வேலை இல்லாமல் தவிப்பது
எதிர்பாராமல் நடந்த விபரீதம் எனினும்...

நாமும் எதிர்பார்த்து காத்திருப்பதை விடுத்து...

எதிர் காலத்தை வெல்ல
நிகழ் காலத்தில் துணிவுடன் வீறுநடை போடுவோம்....

இனியபாரதி. 

புதன், 20 மே, 2020

குறும்புகள்...

எனக்குப் பிடிக்காது என்பதற்காகவே
அவள் செய்யும் சிறு சிறு குறும்புகள்

சில நாட்கள் கழித்து சிந்தித்தால்
சிரிப்பு தான் வரும்

அழகாய் கூர்ந்து நோக்கும் அவள் கண்கள்
அன்பாய் அள்ளிப் பருகும் அவள் உதடுகள்

சண்டையில் வாடிப் போவதோ
அவளின் குட்டி இதயம் தான்!!!


இனியபாரதி. 


செவ்வாய், 19 மே, 2020

நேர்மறை எண்ணங்கள்...

உன்னைச் சுற்றி எப்போதும்
நேர்மறை எண்ணங்கள் கொண்ட
உறவுகளையே வைத்துக் கொள்...


அவர்களின் எண்ணங்கள்
உன் எண்ணங்களுடன் சேரும் போது
இன்னும் வலுப்பெறும்...

உன் எண்ணங்கள் மட்டும் அல்ல
உன் வாழ்க்கையும்....


இனியபாரதி. 

திங்கள், 18 மே, 2020

வலி 2

பிறர் நமக்குக் கொடுக்கும் வலி....

நாம் தற்கொலை செய்து கொண்டால் கூட
இரண்டு நிமிட வலி...

நாம் கொலை செய்யப்பட்டால் கூட
இருபது நிமிட வலி...

நாம் விபத்தில் மரணித்தால் கூட
இரண்டு மணி நேர வலி...

மேற்சொன்ன வலிகளைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். 

ஆனால்
நாம் இவ்வுலகில் இருக்கும் வரை
மற்றவர்கள் கொடுக்கும் வலியை
வரையறை செய்ய முடியாது!!!

இனியபாரதி. 

சனி, 16 மே, 2020

வலி...

வலியைப் பற்றி எனது கருத்து...

(இன்றைய தலைப்பும் மகளினதே....)

முதலில் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் வலிகள் பற்றி ஒரு அலசல்...

1. பிறந்த இரண்டே நாட்களில்
அவள் முலைகளைக் கடித்து
தாய்க்குக் கொடுத்த வலி...

2. தந்தை கொஞ்சல் கேட்டு
பிஞ்சுக் காலால் 
அவரை உதைத்து 
அவருக்குக் கொடுத்த வலி...

3. சிறு வயதில்
உயிர் என்றும் உணராமல்
குட்டி எறும்புகளைக் கொன்று
அவற்றின் குடும்பத்திற்குக்
கொடுத்த வலி...

4. பள்ளிப் பருவத்தில்
நண்பர்களுடன் சண்டையிட்டு
பேசாமல் அவர்களுக்குக் கொடுத்த வலி...

5. கல்லூரிக் காலங்களில்
பெற்றோரிடம் பணம் கேட்டு
அவர்களைத் தொந்தரவு செய்து அழ வைத்த வலி...

6. திருமணத்தில் மணப்பெண் வீட்டில்
வரதட்சணை கேட்டு
அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தி
சித்திரவதை செய்த வலி...

7. குழந்தை பிறந்தவுடன்
அவள் அழகைத் தக்க வைக்க
தெரிந்த எல்லா வழிகளையும் சொல்லி
அவளைப் பின்பற்ற வைத்து
அவலம் செய்த வலி...

8. கடைசிக் காலத்தில்
துணை இல்லாமல் ஒன்றுமில்லை என்றாலும்
அவளின் இயலாமையை ஏற்றுக் கொள்ளாமல்
தவிக்க வைக்கும் வலி...

இதைப்போல் பல வலிகள்
நம் வாழ்க்கையில்
நம்மை அறியாமல்
மற்றவர்களுக்கு 
நாம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம்...

நாளை மற்றவர்களால் நாம் உணரும் வலிகளைப் பார்ப்போம்...

இனியபாரதி. 

வெள்ளி, 15 மே, 2020

சிந்தனை...

இறைவன் நமக்கு அருளிய 

மிகப் பெரிய வரம் என்றே சொல்லலாம்...

உன் சிந்தனை தெளிவாகும் போது

உன் வாழ்க்கை தெளிவாகும்...

உன் நேர்மறை எண்ணங்கள்

உன் சிந்தனைக்கு உரமாகும்...

நீ வலுப்பெறும் போது

உன் சிந்தனை வலுப்பெறும்...

உன் சிந்தனை வலுப்பெறும் போது

உன் வாழ்க்கை வளமாகும்...

(என்னை எழுதத் தூண்டிய மகளுக்கு நன்றி!!!)

இனியபாரதி. 

வியாழன், 14 மே, 2020

இனிது இனிது...

இனிது இனிது

ஒரு மலராய் வாழ்தல் இனிது...

ஒரு மழலையின் சிரிப்பாய் இருப்பது இனி பது...

இயற்கையில் ஒரு பனித்துளி இனிது...

அன்பில் நம்பிக்கை இனிது...

நட்பில் நாணயம் இனிது...

பிறருடன் நல்ல நட்பு இனிது...

வறியவருக்கு இரங்குதல் இனிது...

இனிது மட்டும் விரும்பும் இனியவருக்கு பரந்த மனம் இனிது...

இனியபாரதி. 

புதன், 13 மே, 2020

மெளனம்...

பல சந்தர்ப்பங்களில் 

நம் கோபம் தான்

நமக்கு நடக்கும் கெட்டவைகள் அனைத்திற்கும் 

காரணமாய் இருக்கும்...


தீடீரென்று வரும் அக்கோபம்

எப்படி வந்ததென்றே

சில நிமிடங்கள் கழித்து தான்

யோசிக்கத் தோன்றும்...

ஆனால்...

அந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு

நம்மை நிரூபிப்பது கடினம்...

கோபம்...

நம் பலவீனம்...

பலவீனத்தைப் பலமாய் மாற்றத் தேவையான நல்ல மருந்து

மெளனம் மட்டுமே!!!

இனியபாரதி. 




செவ்வாய், 12 மே, 2020

முக்கியக் குறிப்பு...

அன்பு வாசகர்களே...

வணக்கம்.

என் வலையில் பூக்கும் ஒவ்வொரு பூக்களும்
என் எண்ணங்களும் கற்பனைகளுமே...

என் வாழ்க்கையையோ அல்லது 
பிறரைப் புண்படுத்தும் நோக்கத்திலோ
எழுதப்படுபவை அல்ல...
என் எண்ணங்கள், அன்றாடம் தோன்றும் சிந்தனைகள் மட்டும் தான் என் எழுத்துக்குக் காரணம்... 

யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை...

இனியபாரதி. 




குயிலைப் போல்...

குயிலின் குரல் எப்படியோ
நம்மை வசீகரித்து விடுகிறது...

அது எந்தவொரு பள்ளிக்கும் சென்றிருக்காது
பாடக் கற்றுக் கொள்ள!!!

அதற்குக் கூட தெரியாது
என்னால் இவ்வளவு அழகாக குரல் எழுப்ப முடியுமா என்று...

என் மனமே...

உன் அருமை சில நேரம்
உனக்குக் கூடத் தெரியாமல் இருக்கலாம்...

கலங்காமல்...
உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை
உன் முழு மனதுடன் செய்...

இனியபாரதி. 

திங்கள், 11 மே, 2020

அன்புப் பெற்றோர்களே...

அன்புப் பெற்றோர்களே...

இவ்வுலகில் ஒப்பீடு செய்ய 
எவ்வளவோ விசயங்கள் உள்ளன...

ஒப்பீடு செய்யுங்கள்...

உங்கள் பிள்ளையின் கடந்த காலத்தை விட நிகழ் காலம் சிறந்ததாய் இருக்கிறதா என்று...

உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கிறதா என்று...

உங்கள் பிள்ளைக்கு அன்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறதா என்று...

ஒப்பீடு செய்யாதீர்கள்...

உங்கள் பிள்ளையின் வருமானத்தை
உங்கள் உறவுக்காரரின் பிள்ளையின் வருமானத்துடன்...

உங்கள் வசதியை
மற்றவரின் வசதியுடன்...

உங்கள் பிள்ளையின் திறமைகளை
மற்ற பிள்ளைகளுடன்...

நல்ல பிள்ளை இருக்கும் போது உங்களுக்குத் தொந்தரவாகத்தான் தெரியும்...

இல்லாத போது உணர்வீர்கள் அதன் வலியை!!!

உங்களைப் போல் அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணருங்கள்!!!

இனியபாரதி. 







ஞாயிறு, 10 மே, 2020

அன்னையர் தினம்...

பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து

வேதனைகள் கடந்து

ஒரு உயிரை உலகிற்கு கொடுப்பவள் மட்டும் தாய் அல்ல...

உனக்கு ஒன்று என்றவுடன்
தவித்துப் போகும் தந்தை...

உன்னைக் கண்ணுக்குள் வைத்துக்
காத்துக் கொள்ளும் அண்ணன்...

உன்னால் முடியாத நேரங்களில் உடனிருந்து பார்த்துக் கொள்ளும் தங்கை...

நீ அவனது இரண்டாவது தாய் என்று எண்ணி வாழும் தம்பி...

எப்போது அழைத்தாலும் 
உன் கொஞ்சு குரல் கேட்டு மகிழும் அத்தை...

உனக்காக நான் இருக்கேன் என்று
அடிக்கடி உணர்த்தும் நண்பர்கள்...

அப்பப்போ வந்து போகும் உறவுகள்...

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில்
நமக்குத் தாயாய் இருந்திருக்கலாம்...

இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கை அமைந்த ஒவ்வொருவரும் தன்னையே தாயாகப் பாவித்துக் கொள்வதில் தப்பில்லை...

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...

இனியபாரதி. 

நெடும் பயணம்...

தனிமை ஒரு சாபம் அல்ல... 

அது ஒரு வரம்...

நம்மில் இதயம் இரண்டில்லை..

ஏன் தெரியுமா?

அது தனிமையிலேயே சுகம் கண்டு கொள்ளும்...

நமக்கு மூளை கூட இரண்டில்லை...

ஏன்?

தனியாக இருந்து நம்மை ஆளும் சக்தி அதற்குண்டு...

ஒரே ஒரு ஆசை கொண்ட ஒரு தனி இதயம் துடிக்கின்றது...

ஒரு நெடும் பயணத்திற்காய்!!!

தனி ஒரு பயணம்...

அதுவே அந்த இதயத்தின் கடைசி பயணமாக!!

இனியபாரதி. 








சனி, 9 மே, 2020

செல்லம்மா ஏன் அழற?

பாரதி படம்....

எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...

பாரதியின் இதழ் பட்ட செல்லம்மா...

அழுதுகொண்டே அறைக்குள் நுழைகிறாள்...

இங்கு

கனவு களைக்கப்பட்டது பாரதிக்கா?

செல்லம்மாவிற்கா?

இனியபாரதி. 

வெள்ளி, 8 மே, 2020

மாற்றத்திற்கான ஆறு நாட்கள்...

மாற்றம் வரும் அரசியலில்

மாற்றம் வரும் ஏழ்மையில்

மாற்றம் வரும் குணங்களில்

மாற்றம் வரும் வாழ்க்கையில்...

காத்திரு... மாற்றத்திற்காய்...

இனியபாரதி.  

மகிழ்ந்திரு...

உன் உள்ளம் பறிபோனதா

உன் பணம் கையை விட்டுச் சென்றதா

கவலை கண்களை நனைக்கிறதா

மனம் கடினமாய் மாறிவிட்டதா

காதல் கசப்பாய் தெரிகின்றதா

அறிவுரைகள் ஆறுதல் தருகின்றனவா

கலங்காதே!!!

மகிழ்ந்திரு...

இனியபாரதி. 

வியாழன், 7 மே, 2020

நாம் இருவருக்குமான உலகம்...

அதிகமாய் அன்பு வைத்தால்

அவதிப்படுவது அவன் மட்டும் தான்...

கடைசி வரைத் தன் நிலையை

உணர்த்த முடியா கையறு நிலை...

அன்பின் மிகுதியால்

அவளைத் தனக்குள் அடக்கிக் கொள்ள நினைக்கும் ஆணவம்...


மற்றவர்களின் அன்பை

உதாசீனப்படுத்தும் திமிர்...

யாரையும் கண்டு கொள்ளாமல்

எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்றிருப்பது...


கடைசியில்...

தனிக் கடலில் நீந்த மட்டும் தான் முடியும்....

இனியபாரதி. 


புதன், 6 மே, 2020

பணமோ பொருளோ இல்லா உலகு...

பணம் இல்லா உலகு....

பொருளைத் தேடா உலகு....

ஆசை கொள்ளா உலகு....

ஏமாற்ற நினைக்கா உலகு...

அன்பைப் புரிந்து கொள்ளும் உலகு...

சந்தேகம் கொள்ளா உலகு...

அரவணைக்கும் உலகு...

ஆறுதல் கூறும் உலகு...

புறணி பேசா உலகு...

புரிந்து கொள்ளும் உலகு...

அழகில் ஆசை இல்லா உலகு...

ஜாதி பார்க்கா உலகு...

மதம் தெரியா உலகு...

மண் வாசனை  இரசிக்கும் உலகு...

மலரில் மகிழ்ந்திடும் உலகு...

இயற்கையைப் போற்றிடும் உலகு...

உன் இயல்பை இரசித்திடும் உலகு...

மழலைச் சிரிப்பை  இரசித்திடும் உலகு...

மற்றவரை மதிக்கும் உலகு...

நேரம் செலவிடும் உலகு...

நொந்து கொள்ளா உலகு...

சாதிக்கத் தூண்டும் உலகு...

சாதி வெறி ஏற்றா உலகு...

என்னில் களித்திடும் உலகு...

எங்கென்று கூறுங்கள்...

அந்த உலகைக் காண வேண்டும்!!!


இனியபாரதி. 

செவ்வாய், 5 மே, 2020

மண் வாசனை... மன வாசனை...

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில்

செம்மண் சூழ்ந்த நிலப்பரப்பில்

திடீரெனப் பெய்யும் மழை

தரும் வாசம்

மனதைக் கவர்ந்து இழுக்கும்...

அந்த வாசம் தான் 

அவள் மனத்தின் வாசமும்!!!

இனியபாரதி. 

திங்கள், 4 மே, 2020

காந்த விழி அழகி....

அந்தக் காந்த விழி தான்

இன்னும் என்னைக் கட்டி 

வைத்துக் கொண்டு

இடமும் வலமும்

திரும்ப முடியாமல்

என்னைப் படுத்துகிறது!!!

இந்தப்பாடு பிடிக்கவில்லை என்றில்லை...

என்னை நானே 

மறந்து விடுவேனோ

என்ற பயம் மட்டும் தான்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 3 மே, 2020

நிறைவளிக்கும் அன்பு...

தனக்காய் காத்திருக்கும் அன்பை

புரிந்து கொள்ளும் அன்பு அபூர்வம்

புரிந்து கொண்ட அன்பை

ஏற்றுக் கொள்ளும் எண்ணம் அபூர்வம்

ஏற்றுக் கொண்ட அன்பை

துண்டிக்காமல் இருப்பது அபூர்வம்

துண்டிக்காத அன்பை

இறுதி வரை அன்பு செய்தல் அபூர்வம்...


இனியபாரதி. 



சனி, 2 மே, 2020

பாடல் எழுத ஆசை...

அழகான பாடல் வரிகள்

இயற்ற ஆசை!!!

அந்த ஆசைக்கு

உயிர் கொடுக்க வரும்

அந்தக் காட்சிகளை

மனதில் உள் வாங்கிக் கொண்டு

ஆழமாய் சிந்திக்க ஆசை!!!

அந்தச் சிந்தையின்

பயனாய் எழும்

என் வரிகளைக் காண ஆசை!!!

இனியபாரதி. 


கானல் நீராகும் கனவுகள்....

கனவு மட்டுமே கண்டு கொண்டு

வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்

அப்படி இருக்க வேண்டும் 

என்று நினைப்பது

ஒரு அழகான கானல் நீர் 

போன்று தோன்றும்...

அந்தக் கானல் நீரை

உயிர் தரும் நீராக மாற்றுவது

உன் உழைப்பில் தான் உள்ளது!!!

நன்றி அன்பு!!!

இனியபாரதி. 

வெள்ளி, 1 மே, 2020

தொழிலாளர்களுக்கு...

தொழிலாளர்கள்

உழைப்பாளிகள்

மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள்

எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்...

எப்படியும் இருக்கலாம் என்ற முதலாளித்துவ நாட்டில்

ஒவ்வொரு தொழிலாளியின் நிலையும் கேள்விக்குறி தான்...

இத்தினத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு,
நமக்காக வேலை செய்யும் தொழிலாளிகளைக் கொண்டாடுவோம்...

நாடு முன்னேறும்!!!

எல்லோரின் வாழ்வும் செழிக்கும்!!!

இனியபாரதி.