காலையில் எந்த அவசரமும் இல்லை
நான் விரும்பிய நேரத்தில் எழலாம்!
நான் விரும்பும் நேரத்திற்குக் குளிக்கலாம்!
காலை பத்து மணிக்குத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும்!!!
அதற்குள் எத்தனை எத்தனை உறவுகள்?
எழுந்தவுடன் ரிச்சாவிடம்(செல்லமாக நான் அழைப்பது)
கொஞ்ச நேரச் சண்டைப் பேச்சு!!!
சுகந்தியுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது!
அறையிலுள்ள அனைவருடனும் அரட்டை அடிப்பது!!
இதைச் செய்... அதைச் செய்.. என்று அதட்ட ஆட்கள் இல்லை!
இப்படி இரு.. அப்படி இருக்காதே என்று அறிவுரை கூறவும் யாரும் இல்லை!
இப்படி அனைத்துச் சுதந்திரம் கிடைத்ததால் தான் என்னவோ
அந்த நாட்கள் இன்னும் என் நெஞ்சில் பசுமையான
நினைவலைகளாக நிலைத்திருக்கின்றன!!!
அலுவலகத்தில் அனைவரும் அண்ணன், தங்கை உறவுகள் தான்!
எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாமல் அனைவரும் பழகுவர்!
வேலை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்
நம் வேலைகளை முடித்துவிடுவோம்!
இரவு வேளைகளில் தனிமையில் நடந்து வந்ததைவிட
என் அண்ணன்களுடன் பேசிக்கொண்டே
நடந்து வந்த பொழுதுகள் இன்றும் நினைத்தால்
தேனாமிர்தமாய் இனிக்கின்றன!
நீ ஏன் தனியாய் செல்கிறாய் என்று கேட்கக் கூட
ஆள் இல்லாமல்
தெருவோரங்களில் மெதுவாய் நடந்து சென்ற பொழுதுகள்!
பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுகள்!
மாலை வேளைகளில் ஆலயத்திற்குச் சென்ற ஞாயிற்றுக் கிழமைகள்!
வார விடுமுறைகளில் பக்கத்து வீடுகளில் இருக்கும்
குட்டி வாண்டுகளுடன் விளையாடுவது!
இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும் போது
வாழ்க்கையில் நான் நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன் என்று
எண்ணத் தோன்றுகிறது!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக