பாடம் படிக்கவும் பிடிக்கவில்லை...
படித்தவர்களைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை...
பள்ளி வகுப்பறைகள் அரட்டை அரங்கங்களாகவும்
ஆசிரியர்கள் அதில் விவாதிக்க வந்தவர்கள் போலவும்
பார்வையாளர்கள் போல் நாங்களும்...
என்று தினமும் நாட்களைக் கடத்தினோம்...
நாளை நாளை என்று நாட்களோடு சேர்த்து
எங்களுக்கு வரப்போகும் துக்கங்களையும் கடத்தினோம்!
விளையாட்டு மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது
அந்நாட்களில் தான்!
புகைப்படக் கருவிகளைப் பார்ப்பதே அரிதான
அந்த பள்ளிப் பருவம்
தோழிகளின் நினைவுகள் மட்டும் மனதில் படமாய்ப் பதிந்துவிட்டன!
காதல் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்
காதலித்த தோழிகளுக்காய்த் தூது சென்ற நாட்கள்!
தோழர்களைப் பார்த்தால் வெட்கித் தலைகுனியும்
தீதறியா அந்த பள்ளிப்பருவம்!
முப்பாலும் சொல்லிக் கொடுத்தாலும்
அறத்துப் பாலைத் தவிர வேறொன்றும் அறியாமல்
இருந்த பருவம்!
தோழியின் ஒரு ரூபாயில் நால்வரும்
பங்கு போட்டு வாங்கிச் சாப்பிட்ட பருவம்!
என்ன தான் சண்டை வந்தாலும் இரண்டே
நாட்களில் சமரசம் செய்து கொண்ட பருவம்!
எல்லாவற்றையும்
பள்ளிப் பருவத்திலேயே
இழந்து விட்ட தவிப்பில்
இன்றைய தலைமுறையின்
பள்ளிப் பருவ வாழ்க்கை முறையை
நினைத்து மனம் வெதும்புகிறது!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக