வியாழன், 20 ஜூலை, 2017

அழகு என்றும் ஆபத்தானது...

ஒரு தோட்டத்தில் இரண்டு ரோஜாச் செடிகள் இருந்தன... அவற்றை நட்டு வைத்தவர், அவை இரண்டையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்.
ஒரு நாள் அந்தச் செடிகள் இரண்டும் பேசிக் கொண்டன..
நாம் இருவரும் பிறந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகின்றன... இன்றோ.. நாளையோ... நாம் கொண்டுள்ள மொட்டுகள் பூத்துக் குலுங்கப் போகின்றன. அவற்றைக் காண ஆவலாய் உள்ளேன் என்று ஆசையாய் பேசிக் கொண்டிருந்தன.
இரண்டு நாட்கள் கடந்தன..
முதல் செடியில் அழகான சிவப்பு வண்ண மலர்கள் பூத்து, பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாய் இருந்தன. இரண்டாவது செடியில் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன..
இதைக் கண்டதும் முதல் செடிக்கு கர்வம் வந்து விட்டது... நாம் தான் அழகாய் இருக்கிறோம்... நம்மைத் தான் அனைவரும் இரசிக்கிறார்கள்... என்று ஆணவம் வந்துவிட்டது.
அதனால், அடுத்தச்செடியிடம் கொண்டிருந்த நட்பையும் துண்டித்துக்கொண்டது அந்த முதல் செடி. அதனுடன் பேசவும் இல்லை... இரண்டாம் செடிக்கு, தன் தோழனை இழந்த சோகத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது.
நான், என் நண்பன் என்று தானே பழகினேன். இவன் ஏன் என்னை இவ்வளவு கேவலமாகப் பார்க்கிறான் என்று மிகவும் கவலைப்பட்டது.
வெகு சில நாட்களில் அந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு வெளிநாட்டுப் பயணி முதல் ரோஜா செடியைப் பார்த்ததும், அதிலுள்ள மலர்களை எல்லாம் பறித்து தன் குழந்தைக்குப் பரிசளித்தான். அதைப் பார்த்த இரண்டாம் ரோஜா செடி, நண்பனின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது.
முதல் ரோஜா செடிக்கு அப்போது தான் ஞானம் வந்தது.
அழகு என்றுமே ஆபத்தானது.
தன் அழகால் கர்வமடைந்த அந்த ரோஜாச் செடி இழந்தது தன் அழகிய மலர்களை...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: