திங்கள், 31 ஜூலை, 2017

இரசித்தவை...

அழகான வரிகள்

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.

4,நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5,காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

இறைவனின்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!

சனி, 29 ஜூலை, 2017

படித்ததில் பிடித்தது...

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?* கட்டாயம் படியுங்கள்.

*நாம் யாரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்? யார் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளலாம்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெல்ல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  நல்ல எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களாலும், துரோகிகளாலும், நடித்து ஏமாற்றுபவர்களாலும்  வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை, துரோகிகளையும், நடித்து ஏமாற்றுபவர்களையும் நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*

வெள்ளி, 28 ஜூலை, 2017

உனக்காகத் தான்....

தேடி அலைந்தேன் உனக்காெரு பெயர் சூட்ட​...
வாடித் திரிந்தேன் உன் முகம் மலர்ந்திருக்க..
ஓடிவந்தேன் உன் அருகில்  நின்றிருக்க...
பார்த்துப் பார்த்து வாங்கிய உன்னை
பார்க்க முடியாமல் பரிதவிக்கிறேன்!
திரு....
இனியபாரதி.

வியாழன், 27 ஜூலை, 2017

குட்டி கதை...

படிக்கும் போது உணர்ச்சிவசப்பட வைக்கும் கதை..

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால், அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..'" என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்,

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை பாேடவேண்டாம்.'

புதன், 26 ஜூலை, 2017

கைக்குட்டை...

அழகான உன் அரவணைப்பில்
அனுதினமும் குளிர்காய்கிறேன்!
உன் வியர்வை முத்துக்களை
முத்தமிட ஆசை கொள்கிறேன்!
என்னால் இணைந்த காதலர்கள் பலர்!
நான் மட்டும் தனியே
உன் காதலுக்காய் தவிக்கிறேன்!
இனியபாரதி.

செவ்வாய், 25 ஜூலை, 2017

அருமையான கதை

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ...
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...

திங்கள், 24 ஜூலை, 2017

அழகான வரிகள்...

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2, பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3, புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.

4, நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5, காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

இறைவனின்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!

ஞாயிறு, 23 ஜூலை, 2017

காதலால் காத்திருந்தான்..

அவன் நினைத்துக்கொண்டதென்னவோ
அவள் தனக்காக காத்திருக்க மாட்டாளென்று...
அவளைக் காணச் சென்ற அன்றுதான்
அவனுக்கு அனைத்தும் விளங்கிற்று...
இவள் நினைப்பில் இவன் ஏங்குவதை எண்ணிப்
பெருமிதம் கொண்டாள்!
எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாத இவளுக்கு
அன்பை மறைத்துவைக்கத் தெரியவில்லை!
பகிர்ந்தாள் அவளன்பை..
ஸ்தம்பித்துப் போனான் அவன்!!!

இனியபாரதி.

சனி, 22 ஜூலை, 2017

படித்ததில் பிடித்தது...

ஒரு அழகான இளைஞன், விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.
அதற்கு அந்த விவசாயி, அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான்... 'இளைஞனே! நீ என் மகளை மணந்து கொள்ள விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும். என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன்' என்று சொல்ல, அவனும் ஒத்துக்கொண்டான்.

மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.

அதைப்பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி, அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம்...
மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச்சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து, இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது. அவன் வாழ்க்கையில் பார்த்த்தில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

இந்த மாட்டைவிடக்கூடாது.... இதைத்தான் நான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான். மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான்.

ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம் அந்த மாட்டுக்கு வாலே இல்லை..

ஆம் நண்பர்களை....
நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புக்கள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புக்கள் கடுமையாக இருக்கலாம். ஆனால், எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி, அதைத் தவற விட்டால், அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது....

ஆக... கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் காெள்வாேம்....

வியாழன், 20 ஜூலை, 2017

அழகு என்றும் ஆபத்தானது...

ஒரு தோட்டத்தில் இரண்டு ரோஜாச் செடிகள் இருந்தன... அவற்றை நட்டு வைத்தவர், அவை இரண்டையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்.
ஒரு நாள் அந்தச் செடிகள் இரண்டும் பேசிக் கொண்டன..
நாம் இருவரும் பிறந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகின்றன... இன்றோ.. நாளையோ... நாம் கொண்டுள்ள மொட்டுகள் பூத்துக் குலுங்கப் போகின்றன. அவற்றைக் காண ஆவலாய் உள்ளேன் என்று ஆசையாய் பேசிக் கொண்டிருந்தன.
இரண்டு நாட்கள் கடந்தன..
முதல் செடியில் அழகான சிவப்பு வண்ண மலர்கள் பூத்து, பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாய் இருந்தன. இரண்டாவது செடியில் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன..
இதைக் கண்டதும் முதல் செடிக்கு கர்வம் வந்து விட்டது... நாம் தான் அழகாய் இருக்கிறோம்... நம்மைத் தான் அனைவரும் இரசிக்கிறார்கள்... என்று ஆணவம் வந்துவிட்டது.
அதனால், அடுத்தச்செடியிடம் கொண்டிருந்த நட்பையும் துண்டித்துக்கொண்டது அந்த முதல் செடி. அதனுடன் பேசவும் இல்லை... இரண்டாம் செடிக்கு, தன் தோழனை இழந்த சோகத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது.
நான், என் நண்பன் என்று தானே பழகினேன். இவன் ஏன் என்னை இவ்வளவு கேவலமாகப் பார்க்கிறான் என்று மிகவும் கவலைப்பட்டது.
வெகு சில நாட்களில் அந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு வெளிநாட்டுப் பயணி முதல் ரோஜா செடியைப் பார்த்ததும், அதிலுள்ள மலர்களை எல்லாம் பறித்து தன் குழந்தைக்குப் பரிசளித்தான். அதைப் பார்த்த இரண்டாம் ரோஜா செடி, நண்பனின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது.
முதல் ரோஜா செடிக்கு அப்போது தான் ஞானம் வந்தது.
அழகு என்றுமே ஆபத்தானது.
தன் அழகால் கர்வமடைந்த அந்த ரோஜாச் செடி இழந்தது தன் அழகிய மலர்களை...

இனியபாரதி.

புதன், 19 ஜூலை, 2017

நேரத்தின் மதிப்பு...

படித்ததில் பிடித்தது...
ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்
வாங்கியவரைக் கேட்டால் தெரியும்!
ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக்
கேட்டால் தெரியும்!
ஒரு நிமிடத்தின் மதிப்பை
தூக்கிலிடப்படும் கைதியைக் கேட்டால் தெரியும்!
ஒரு மணி நேரத்தின் மதிப்பை
உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்!
ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத
தினக் கூலி தொழிலாளரைக் கேட்டால் தெரியும்!
ஒரு வாரத்தின் மதிப்பை
வாரப்பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்!
ஒரு மாதத்தின் மதிப்பை
குறைப்பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்!
ஒரு வருடத்தின் மதிப்பை
தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்!
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்...
ஓடுவது முள் அல்ல...
நம் வாழ்க்கை!!!

இனியபாரதி.

செவ்வாய், 18 ஜூலை, 2017

மாற்றமில்லை...

கொடுக்க கொடுக்க வாங்கும் போது
என் போக்கில் மாற்றமில்லை! – அரசியல்வாதி.
கிடைக்க கிடைக்க பெறும்பேர்து
என் நம்பிக்கையில் மாற்றமில்லை! – பக்தன்.
சிரிக்க சிரிக்க கவலை வரும்போது
என் புன்னகையில் மாற்றமில்லை!  - நான்.

இனியபாரதி.

திங்கள், 17 ஜூலை, 2017

இனிய வரவேற்பு...

எனக்காய் காத்திருக்கும் கவலைகளுக்கு
நான் சொல்லிக் கொள்வதென்னவோ
ஒன்றே ஒன்று தான்!
என்னைத் தாக்க வேண்டுமென்று நினைத்து
மொத்தமாய் என்னிடம் வந்துவிடாதீர்கள்!
ஒருவர் ஒருவராக நானே அழைத்துக் கொள்கிறேன்!

இனியபாரதி...

ஞாயிறு, 16 ஜூலை, 2017

எங்கே சென்றது?

இன்று, ஒரு சிறப்பானதொரு காணொளியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதன் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்... 'உணவுக்காக ஒரு குரங்கை அடிக்கின்றது ஒரு சிறுத்தை. அடித்த பிறகு தான் தெரிகின்றது, பிறந்த குட்டி ஒன்று இருக்கிறதென்று... தாயைக்கொன்றுவிட்டோமே.. குட்டியை அனாதையாகிவிட்டோமே என்ற வேதனையில் பசியை மறக்கின்றது அந்தச் சிறுத்தை. குட்டி குரங்கை சிறுத்தை அரவணைத்துக் காக்கின்றது.. செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த வீடியோ பதிவு' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காணொளியில் சிறுத்தை எப்படி அந்தக் குட்டிக் குரங்கை இரவெல்லாம் அரவணைத்துக் காத்;தது என்ற பதிவு இருந்தது.

அந்தக் காணொளியைக் கண்ட போது, சிறுத்தையை நினைத்துப் பெருமிதமும், அந்தக் குட்டிக் குரங்கை நினைத்துப் பரிதாபமும் தான் வந்தது.

ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்குக் கூட இப்படி ஒரு மனநிலை இருக்கும்போது ஏன் இந்த மனித இனம்(நம் இனம்) இப்படி இருக்கிறது? என்று யோசிக்கத் தோன்றியது.. ஒருசிலரின் தவற்றிற்காய் அனைவரையும் குறைகூற முடியாது. இந்த உலகில், இன்னும் நல்லவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

செய்த பாவத்திற்குப் பிராய்ச்சித்தம் தேடிக் கொண்டது அந்தச் சிறுத்தை. ஆனால், செய்வது பாவம் என்று உணராமலே அனைத்தையும் செய்கின்றது இந்த மனித இனம்.
நானும் என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
காணொளியைக் காண கீழே சொடுக்கவும்...

https://youtu.be/ugi4x8kZJzk

இனியபாரதி.

சனி, 15 ஜூலை, 2017

அழகாய் நடக்கும் அழகைக் கண்டு...

வியந்தேன் உன் நடையழகில்...
இதுவரைக் கண்டதில்லை உன் நடையை...
முதல்முறை பார்த்ததும் ஸ்தம்பித்துப்போனேன்...
அழகாயத் தத்தித்தத்தி அன்னநடை போட்டது
பார்ப்பவர்களையே வியப்பில் ஆழ்த்தியது!
உண்மையில் உனக்கு நடக்கத் தெரியுமா
என்று பிறகுதான் யோசித்தேன்!
என்னே என்னை வியக்க வைத்த
உன் நடையழகு!
அந்தக் குட்டி மைனாவிற்கு என் வாழ்த்துகள்!

இனியபாரதி.

வெள்ளி, 14 ஜூலை, 2017

வேறொன்றும் தெரியாது...

பிறந்தவுடன் என்னைப் பாசமாய்த் தூக்கி அணைத்துக் கொஞ்சியதும் நீங்கள் தான்!
குழந்தையாய் என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டதும் நீங்கள் தான்!
பாடம் படிக்காத போதெல்லாம் என்னை அதட்டிப் படிக்க வைத்ததும் நீங்கள் தான்!
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போது என்னைக் குறித்துப் பெருமிதப்பட்டதும் நீங்கள் தான்!
பன்னிரெண்டு வயதிலும் என்னைத் தூக்கிக் கொண்டு நடந்து அழகு பார்த்ததும் நீங்கள் தான்!
பதினான்கு வயதில் வந்த காதல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததும் நீங்கள் தான்!
இருபது வயதில் பாசத்தை உணர வைத்ததும் நீங்கள் தான்!
இருபத்து மூன்று வயதில் சொந்தக் காலில் நிற்கத் தைரியத்தைக் கொடுத்ததும் நீங்கள் தான்!
இருபத்து ஆறு வயதிலும் மனம் தளராமல்
நிதானமாய்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும்
பக்குவத்தைக்
கற்றுக் கொடுத்ததும்
நீங்கள் தான்....
'நீங்கள்' இல்லை என்றால் நான் இல்லை...
என்றும் என் அன்பில் என் அப்பா...

இனியபாரதி.

வியாழன், 13 ஜூலை, 2017

படித்ததில் இரசித்தது...

*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே.

*கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

*வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

*ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

*உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

*ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

*உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

*நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

*கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.

புதன், 12 ஜூலை, 2017

இருமடங்காகிறது...

கவிதைக்குத் தெரியாது
நான் உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன் என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை திட்டியிருக்கும் என்னை...
உன்மனம் புரியாதவளை இன்னுமா நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று!!!
காத்திருத்தலுக்குத் தெரியாது
நான் உனக்காய்த் தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை சிரித்திருக்கும் என்னைப் பார்த்து...
வராதவளுக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறாயே என்று!!!
இரவிற்குத் தெரியாது
நான் இன்னும் தூங்கவில்லை என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை சீக்கிரமாய்த் தூங்க வைத்திருக்கும் என்னை...
எப்படியும் அவள் உன்னைப் பார்க்க வரப்போவதில்லை என்று!!!
அவனும் காத்திருக்கிறான்...
அவளும் அவனுக்காய் காத்திருக்கிறாள்!
காத்திருத்தலில் அன்பு இருமடங்காகிறது.

காத்திருக்கிறேன் உன் வருகைக்காய்...

உன்,
இனியபாரதி.

செவ்வாய், 11 ஜூலை, 2017

பள்ளிப் பருவத்திலேயே...

பாடம் படிக்கவும் பிடிக்கவில்லை...
படித்தவர்களைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை...
பள்ளி வகுப்பறைகள் அரட்டை அரங்கங்களாகவும்
ஆசிரியர்கள் அதில் விவாதிக்க வந்தவர்கள் போலவும்
பார்வையாளர்கள் போல் நாங்களும்...
என்று தினமும் நாட்களைக் கடத்தினோம்...
நாளை நாளை என்று நாட்களோடு சேர்த்து
எங்களுக்கு வரப்போகும் துக்கங்களையும் கடத்தினோம்!
விளையாட்டு மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது
அந்நாட்களில் தான்!
புகைப்படக் கருவிகளைப் பார்ப்பதே அரிதான
அந்த பள்ளிப் பருவம்
தோழிகளின் நினைவுகள் மட்டும் மனதில் படமாய்ப் பதிந்துவிட்டன!
காதல் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்
காதலித்த தோழிகளுக்காய்த் தூது சென்ற நாட்கள்!
தோழர்களைப் பார்த்தால் வெட்கித் தலைகுனியும்
தீதறியா அந்த பள்ளிப்பருவம்!
முப்பாலும் சொல்லிக் கொடுத்தாலும்
அறத்துப் பாலைத் தவிர வேறொன்றும் அறியாமல்
இருந்த பருவம்!
தோழியின் ஒரு ரூபாயில் நால்வரும்
பங்கு போட்டு வாங்கிச் சாப்பிட்ட பருவம்!
என்ன தான் சண்டை வந்தாலும் இரண்டே
நாட்களில் சமரசம் செய்து கொண்ட பருவம்!
எல்லாவற்றையும்
பள்ளிப் பருவத்திலேயே
இழந்து விட்ட தவிப்பில்
இன்றைய தலைமுறையின்
பள்ளிப் பருவ வாழ்க்கை முறையை
நினைத்து மனம் வெதும்புகிறது!!!

இனியபாரதி.