புதன், 28 பிப்ரவரி, 2018

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்...

காலை முதல் வேலை செய்கிறேன்...
குடும்பத்தைப் பற்றி...
நண்பர்களைப் பற்றி...
உறவுகளைப் பற்றி...
ஊரைப் பற்றி...
நாட்டைப் பற்றி...
இப்படி எதையும் சிந்திக்கக்
கூட நேரம் கொடுக்காமல்
என் முழு சக்தியையும்
சுரண்டிக் கொள்கிறார்கள்...
மாலை வீடு கிளம்பும்
நேரத்தில் தான்
அடுத்த வேலை காத்திருக்கும்...
முடியாது என்று சொல்வதற்குக் கூட
முழு சுதந்திரம் கிடையாது!!!
வேறு வழியின்றி அதையும்
முடித்து விட்டுக் கிளம்ப
எப்படியும் ஐந்தாகி விடும்...
இப்படி தினமும் என்னை
நன்றாய் பயன்படுத்தும்
என் அலுவலகம்
என் உழைப்பிற்கு ஏற்ற
ஊதியம் மட்டும்
கொடுக்கத் தவறுகிறது...

இனியபாரதி.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வெளிச்சம்...

அவனுக்காகக் காத்திருந்து
நான் பெற்றுக் கொண்டது என்னவோ
உன் வெளிச்சம் மட்டும் தான்!!!

காலை இளங்கதிர் ஒளி.

இனியபாரதி.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

படித்ததில் பிடித்தது...

1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

6) முன் நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”

9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்.

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும் ....

வாழ்க வளமுடன்...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

அழகை...

புற அழகை அன்பு செய்யும்
ஒருவன்...
நீ ஒரு முறை உதாசீனப்படுத்தினாலும்
உன் பின்னால் வர மாட்டான்...
உன் அக அழகை விரும்புகிறவன்
நீ என்ன சொன்னாலும்
உன்னை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டான்...

இனியபாரதி.

சனி, 24 பிப்ரவரி, 2018

காதல் சொல்ல...

கவிதைகளில் காதல் சொல்ல
நான் ஒன்றும் கவிஞனும் அல்ல...
நீ ஒன்றும் அழகியும் அல்ல...
உன்னை எனக்குப் பிடிக்கும்...
அதன் காரணம் அறியேன்...
அதனால் என் காதல் சொல்ல விழைகிறேன்....

இனியபாரதி.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

உனக்காக...

வாழ்ந்து தான்
பார்ப்போமே என்று
சபதம் எடு...
இது உன் நாடு...
உன் சுதந்திரம்...
உன் வாழ்க்கை...
உன் மகிழ்ச்சி...
யாராலும் உன்னைக்
கட்டுப் படுத்த முடியாது பெண்ணே!!

இனியபாரதி.

வியாழன், 22 பிப்ரவரி, 2018

வேண்டா வெறுப்பாய்...

உன்னிடம் எதுவும்
சொல்ல வேண்டாமென்று
அவன் ஒதுங்க
நினைக்கும்
அந்த நிமிடங்கள்
அவன் மட்டும் தான்
வேண்டும் என்று
நீ அருகில் நெருங்க
நினைப்பது
அவனுக்கு விருப்பத்தைத்
தருமா என்ன?

இனியபாரதி.

புதன், 21 பிப்ரவரி, 2018

திண்டாட்டம்...

வேலை இல்லாத் திண்டாட்டத்தைக்
குறைக்க
அரசாங்கம்
வழி செய்யும்...
அன்பு இல்லாத் திண்டாட்டத்தைக்
குறைக்க யார் இருக்கிறார்கள்?

இனியபாரதி.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

காத்திருந்தாள்....

அவன் முகம் கூட
மறந்து போகும்...
வருடம் பல கடந்து
வயதாகி விட்டது...
இளமையின் துடிப்பில்
செய்த ஒவ்வொரு
செயல்களும்
மனதில் வந்து வந்து
செல்கின்றன...
காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
காத்திருப்பேன்....
அவனின் பார்வைக்காய்.....

இனியபாரதி.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இதமான இதழ்கள்...

உன் அழகான இதழ்கள்
கோர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்
என் வாழ்வில் மணத்தைக்
கொண்டு வருகின்றன!!!
உன் மௌனத்தில்
குவியும் இதழ்கள்
உன் மென்மையை நான்
உணரச் செய்கின்றன!!!
உன் புன்னகையில்
விரியும் இதழ்கள்
ஏழு ஸ்வரங்களையும்
ஒரே நொடியில்
அள்ளித் தெறிக்கின்றன!!!

இனியபாரதி.

சனி, 17 பிப்ரவரி, 2018

குட்டி மயில்....

இந்தப் புலி கூட
கர்வப்பட்டிருக்கும்.....
அழகு மயிலின்
கையில் இருப்பதை எண்ணி....

இனியபாரதி.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

திரைச் சீலை...

யாருக்கும் அதிக
ஈர்ப்பைத் தராமல்
சாதாரணமாய் ஒரு ஓரத்தில்
தொங்க விடப்பட்டுள்ள நான்
உன்னை சூரிய ஒளியில் இருந்தும்,
மற்ற தீமைகளில் இருந்தும்
காக்கின்றேன்.....

இனியபாரதி.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

கருப்புக் கொடி...

உன்னை அளவுக்கு அதிகமாய்
பிடித்தும்...
உன்னைப் பிடிக்கவில்லை
என்று
கருப்புக் கொடி
காட்டும் போது தான்
உணர்கிறேன்....
உன் மீதான என் அன்பை....

இனியபாரதி.

புதன், 14 பிப்ரவரி, 2018

அரிய பொக்கிஷம்....

உலகில் கிடைக்க இயலாதவைகளில் ஒன்று....
நேரம்.....
நம் அன்புக்குரியவர்களிடம்
நேரம் செலவழிக்க வேண்டும் என்று
நாம் நினைக்கும் அந்த நிமிடம்
நம் அன்புக்குரியவர்
மற்றவர்களுடன்
அவர் நேரத்தைப்
பகிர்ந்து கொண்டிருப்பதை
நினைத்துப் பதறும்
அந்த நிலை
மிகவும் கொடியது!!!!!

இனியபாரதி.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

படித்ததில் பிடித்தது....

நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்...
ஒன்று *முன்னால்*
என்றால்
மற்றொன்று *பின்னால்*

ஆனால்,
முன்னால் இருக்கும் கால் *கர்வப்படவும்* இல்லை..
பின்னால் இருக்கும் கால் *அவமானப்படவும்* இல்லை...

அவைகளுக்குத் தெரியும்
நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

காகிதக் கப்பல்...

உண்மையான கப்பல் வாங்கப் பணம் இல்லாவிட்டாலும்
காகிதக் கப்பல் செய்து ஓடும் மழை நீரில் விட்டு
அதை இரசிக்கும் போது இருந்த மகிழ்ச்சி....
இன்று உண்மையான கப்பலுக்கே முதலாளியாக இருந்தாலும்
கிடைப்பதில்லை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அன்புத்தொல்லைகள்....

சில நேரங்களில் நீ செய்யும் குறும்புத்தனங்கள்
என்னை எரிச்சலடைய வைத்தாலும்
நீ இல்லாத நேரங்களில் அதை நினைத்து
நான் சிரித்தது தான் அதிகம்!!!
உன்னுடன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே
பல நாட்கள் கடந்தாலும்
நீ என்னை விட்டுப் பிரியும்
தருணங்கள் தான்
சண்டையிலும் நாம் பகிர்ந்து கொண்ட அன்பை
நான் உணரச் செய்கின்றன!!!
பல நேரங்களில் நான் அணிந்து கொள்ளும்
உடைகளையெல்லாம் அழகு அழகு
என்று இரசிக்கும் உன் இரசனை
சில நேரங்களில் எனக்கே சிரிப்பாய் தோன்றும்!!!
பேச வேண்டுமென்று நீ நினைக்கும் அந்த நிமிடம்
என்னிடமிருந்து அழைப்பு வருகிறதென்று
நீ கூறும் நேரங்களும் இரசிக்கும் நேரங்கள் தான்!!!
இப்படியே எல்லாவற்றையும் கூறிக்கொள்ளாமல்
மறைத்து மறைத்து வைக்கும் உன் அன்பும்
என்றும் எனக்கு சுகம் தான்!!!

இனியபாரதி.

சனி, 10 பிப்ரவரி, 2018

யார் ஆட்சி?

தனியாக இருந்த வரை
என் ஆட்சி தான்
நடந்து கொண்டிருந்தது...

திருமணத்திற்கு பின்
ஆட்சி களையாமல்
எல்லா அதிகாரமும்
அவளுக்கு சென்று விட்டது....

கணவன்....

இனியபாரதி.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

உன்னை....

கவிதைகளால் உன்னை வடிக்கத்
தெரிந்த எனக்கு
உன் நினைவுகளில்
என்னை வடிக்கத்
தெரியவில்லை....

கோபங்கள் பல இருந்தாலும்
என் நினைவை விட்டு
நீங்காத முகமும்
உன்னுடையது தான்....

என்னைக் கோபப் படுத்திப்
பார்க்கும்
உன் வார்த்தைகள் கூட
ரசிக்க வைக்கின்றன உன்னை....

நீ இல்லா நேரமெல்லாம்
வெறுமையாய் என்றும்....

இனியபாரதி.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

உன் அரவணைப்பில்...

விடியற்காலையில் எழுந்து
உன் முகம் பார்க்கும் அந்த நிமிடம் தான்
அந்த நாளில்
என் சூரிய உதயம்!!!
சமைக்க உதவவில்லை என்றாலும்
தொந்தரவு செய்வது
உன் வழக்கம்!!!
அதைக் கண்டு கொள்ளாமல்
இருப்பது என் பழக்கம்!!!
காலை உணவு அருந்துவது
ஒரு குகையைக் குடைவது போல்
அவ்வளவு சிரமம் தான் உனக்கு!!!
அதை எளிதாய் மாற்றும் வேலை எனக்கு!!!
அலுவலகத்திற்குச் சென்ற அடுத்த நொடி
உன்னிடமிருந்து வரும் அழைப்பிற்காய்
காத்திருப்பேன் கால்கடுக்க
அலைபேசியின் அருகில்!!!
சூரிய ஒளி பிரகாசிக்கும் அறை கூட
இருட்டறை போன்றே உணர்கிறேன்
நீயில்லா இந்தத் தனிமைப் பொழுதுகளில்!!!
உன் நினைவுகளை எல்லாம்
எழுத்தாய் வடிக்கிறேன்
என் நாட்குறிப்பேட்டில்!!!
பக்கங்கள் தீரத்தீர
அந்திமாலையின் இளந்தென்றலும்
மெதுவாய் உன் வாசத்தை
வீட்டிற்குள் எடுத்து வந்தது!!!
சட்டென்று என் வானில்
ஓர் அழகிய வானவில்!!!!
என் தோட்டமெல்லாம் பூத்துக் குலுங்கியது!!!
உன் இதய அறையின் அருகில்
என் இதயம் துடித்துக் கொண்டிருந்தது!!!
அந்த அனுபவமே ஒரு முழுநீளத் திரைப்படமாய்
என் எண்ண அலைகளில் ஓட!!!
நிலவின் வெளிச்சம் என் வீட்டிற்குள்
சொல்லாமல் நுழைந்ததை உணர்ந்தேன்!!!
சட்டென்று விலகி நின்ற என்னை
உனதிரு கண்களும் திருடி
அணைத்துக் கொண்டன மறுபடியும்!!!
அடுத்த நாள் விடியலுக்காய் காத்திருக்கிறேன்!!!

இனியபாரதி.

திங்கள், 5 பிப்ரவரி, 2018

காத்திருக்கிறேன்.....

காத்திருப்பது நான் மட்டும் அல்ல....
என் இதயத்திற்கு நெருக்கமான
நீயும் தான் என்பதை
மனம் ஏற்கத் தயங்குகிறது....

இனியபாரதி.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

அன்பு செய்ய...

உன்னைப் பற்றி நினைக்கும் போதே
எனக்குள் ஒரு கிளர்ச்சி!!!
அதை உன்னிடம் சொல்லித் தான்
நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை
என்று தான் நினைத்தேன்!!!
உன்னிடம் சொல்லி சொல்லித்தான்
நீ என்னைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்
நான் என்ன சொன்னாலும் அதை
நீ என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாய்!!!
உனக்காக நான் என்றும் இருக்கிறேன்
என்று நீ நினைக்கும் போது
என்னிடம் வா!
உனக்காய் காத்திருப்பேன் உன் நினைவில்!!!

இனியபாரதி.

சனி, 3 பிப்ரவரி, 2018

காணக்கரிய....

உன் அன்புக் கரங்களால்
என் கண்ணீர் துடைக்கும் அந்த நிமிடங்கள்...
உன் ஆசைப் பார்வையால்
என் வெட்கத்தைத் தூண்டும் அந்த நிமிடங்கள்...
உன் அழகிய பரிசுகளால்
என் பிறந்த நாளை அழங்கரிக்கும் அந்த நிமிடங்கள்...
உன் இன்ப வார்த்தைகளால்
என் மௌனம் களைக்கும் அந்த நிமிடங்கள்...
உன் மௌனத்தால்
உன்னைக் கொஞ்சத் தூண்டும் அந்த நிமிடங்கள்...
உன் குறும்புச் சேட்டையால்
நான் கோபப்படும் அந்த நிமிடங்கள்...
என எல்லா நிமிடங்களும்
உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும்
வரமே எனக்குப் போதும்!!!
இனியபாரதி.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ஓ....

உடைந்து போன உள்ளத்தை
ஒட்ட வைப்பது
"மெல்லிய இசை"

மனம் கசந்த வேளையில்
ஆறுதல் தருவது
"மழலையின் குரல்"

சோர்வுற்ற வேளையில்
திடன் தருவது
"நண்பனின் ஆறுதல்"

இனியபாரதி.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஒரு கட்டத்தில்...

உன்னால் எதுவும் முடியாத பட்சத்தில்
உன் அருகில் இருப்பது
உன் பெற்றோர்களோ, பிள்ளைகளோ அல்ல!!!
நீ செய்த நல்லவைகள் மட்டுமே
உன்னுடன் கடைசி வரை இருக்கும்!
பிறர் மீது அன்பு வைத்து...
பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல்..
பிற உயிர்களை மதித்து..
பிற உயிர்களையும் நம்மைப்போல் நினைத்து
வாழும் போது
கண்டிப்பாக
நீ எதற்கும் அஞ்சத் தேவையில்லை!!!

இனியபாரதி.