வியாழன், 31 மே, 2018

என் இன்பக் குட்டி...

அழகாய் நீ உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
உன் ஆசிரியை கேட்கும் போது
உன்னைக் கட்டி அணைத்து
முத்தமிட ஆசை கொள்வாள்!!!

உன் அருகில் அமரும்
குழந்தைகள்
உன்னுடன் நட்பு கொள்ள
ஆவல் கொள்ளும்!!!

உன்னைப் பெற்றெடுத்தவள்
பெருமை கொண்டாலோ இல்லையோ

நான் பெருமை கொள்கிறேன்

உன் தாயாய் இருப்பதில்!!!!

இனியபாரதி.

புதன், 30 மே, 2018

புரியாத நேரம்....

என்னைப் பற்றி நீ புரிந்து கொள்ள முடியாத நேரங்களில்

கோபப்படாதே....

மெளனமாய் இரு....

விரைவில் எல்லாம் விளங்கி விடும்!

இனியபாரதி.

செவ்வாய், 29 மே, 2018

காற்றில் அதனை....

நடக்கும் தூரங்கள் அதிகம்...

பார்க்கும் கண்கள் அகோரம்...

சிந்திக்கும் எண்ணங்கள் அசிங்கம்...

பேசும் வார்த்தைகள் அவமானம்...

இப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும்

மறந்து விடாமல்..

வைராக்கியமாய் வாழ்க்கையில் சாதித்துக் காட்டு!!!

இனியபாரதி.

திங்கள், 28 மே, 2018

நன்றி இறைவா!!!

சில நேரங்களில்
நான் எதிர்பார்க்காமல்
எனக்கு நீர் கொடுக்கும்
ஆச்சர்யங்கள்

என்னை வியக்க வைக்கின்றன!!!

இத்தோடு நின்று விடாமல்
எனக்கு வரும் இன்னல்களையும்
தாங்கும் வரம் தா இறைவா!!

இனியபாரதி.

ஞாயிறு, 27 மே, 2018

இனிய காலைக் கனவு....

காலைக் கதிரவன்
கண்கள் சிமிட்ட...
பறவைக் கூட்டங்கள்
உணவு தேடிச் சிறகடிக்க...
புல்வெளிப் பனித்துளிகள்
தரையை நனைக்க...
மெல்ல நடந்து வரும்
அவளின் காலடி ஓசைகள்!!!

இனியபாரதி.

சனி, 26 மே, 2018

கொடுக்கு...

உன்னை அறியாமல்
நீ சொல்லிவிடும்
ஒவ்வொரு வார்த்தையும்
யாரோ ஒருவரைக்
கொடுக்கு போல்
குத்திக் கொண்டு இருக்கிறது
என்பதை மட்டும்
மறவாதே!!!

இனியபாரதி.

வெள்ளி, 25 மே, 2018

அழகு மயில்!!!

வேறு என்ன சொல்லி
உன்னை வருணிப்பது என்று
தெரியவில்லை....

இனியபாரதி.

வியாழன், 24 மே, 2018

அன்பான நட்பு...

நட்பு கிடைப்பதே கடினம்..
அதிலும் உண்மையான நட்பு கிடைப்பது மிகவும் கடினம்...
அப்படிக் கிடைக்கும் நட்பை எக்காரணம் கொண்டும் உதறி விடாதே!!!

இனியபாரதி.

தேடும் பொழுதுகள்...

என் இனிமையே!!!

நீ நினைக்கும் பொழுதெல்லாம்
நான் எடுக்கும் விக்கல் சத்தம்

என் உணர்வு நரம்பைத்
தழுவிச் செல்கிறது!!

இனியபாரதி.

செவ்வாய், 22 மே, 2018

கனிவு கொள்...

எப்போதும் அமைதியாக இருக்க
நான் புத்தனும் அல்ல....

எப்போதும் பேசிக் கொண்டே இருக்க
நான் போதகனும் அல்ல...

வேண்டும் இடத்தில்
வேண்டியதை மட்டும் பேசும்
'கனிவானவன்!'

இனியபாரதி.

திங்கள், 21 மே, 2018

எடை உண்டு...

நாம் வாங்கும் தங்கத்திற்கும்
எடை உண்டு...
வீட்டில் சேர்த்து வைக்கும் பணத்திற்கும்
எடை உண்டு...
அதைப் போல்
நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கும்
எடை உண்டு...
அதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் மட்டும் நிரப்புவோம்!!!

இனியபாரதி.

சனி, 19 மே, 2018

திகட்ட வைக்கும் அன்பு....

நன்கு அறிந்து கொண்ட யாரும்
அவனை விட்டுப் பிரிந்து செல்ல
நினைக்க மாட்டார்கள்....

ஆனாலும்....

அவனின் உள்ளம்
சற்று பதைபதைக்கத் தான் செய்கிறது
அவள் தன்னை விட்டுச்
சென்று விடுவாளோ என்று!!!

காரணம்....
திகட்டத் திகட்ட அன்பு செய்வதாய் நினைத்து
தன் அன்பை அவளிடம் சொல்லாமல் இருப்பதால்!!!

இனியபாரதி.

வெள்ளி, 18 மே, 2018

எப்படியும் என்று நினைக்காதே!!!

நான் என்ன சொன்னாலும்
எப்படியும் அவள் என்னிடம் தான்
வரப் போகிறாள்
என்று மட்டும் நினைக்காதே!!!

அவள் உன்னை விட்டு
நிரந்தரமாகப் பிரிந்து சென்று
அவளன்பை நீ உணரச் செய்யவும்
தயங்க மாட்டாள் என்பதையும்
நீ நினைவில் கொள்!!!

இனியபாரதி.

வியாழன், 17 மே, 2018

கனவாய்ப் போன காலம் மாறி....

எல்லாம் கனவாய் மட்டும் இருந்து
என் கனவுகள் எல்லாம்
களைந்து போன
காலங்கள் மாறி...
நானும் கனவு காணலாம் என்ற
தைரியத்தைக் கொடுத்தது
என் தன்னம்பிக்கை!!!

இனியபாரதி.

புதன், 16 மே, 2018

சுடுவதோ நட்பு!!!

அவன் சொல்லும் அனைத்தும்
பொய் என்று தெரிந்தும்
ஏனென்று கேட்காமல்
அப்படியே நம்புவதா நட்பு?

அவனுக்கு உண்மையின் வலிமையை
அறியுருத்துவது அன்றோ நட்பு!!!

அவன் மற்றவனைப் பற்றியே
பேசும் போது
அவனுடன் சேர்ந்து
நானும் பேசுவதா நட்பு?

அடுத்தவர்களைப் பற்றி
பேசுவது தவறென்று கூறி
அவனைத் திருத்துவது அன்றோ நட்பு!!!

அவன் கோபமாய்ப்
பேசுகிறான் என்றால்
நானும் அவனுடன் சேர்ந்து
கோபப் படுவதா நட்பு?

அவன் கோபத்தை
என் இனிமையான பேச்சின் மூலம்
குறைப்பதன்றோ நட்பு!!!

இனியபாரதி.

செவ்வாய், 15 மே, 2018

கடினம் தான்...

அவளின் குரல் இல்லாமல்
என் நாள் கழிவது
மிகவும் கடினம் தான்!!!

இனியபாரதி.

திங்கள், 14 மே, 2018

தெரியவில்லை....

நீ இருக்கிறாய் என்று
உணர்ந்து கொண்ட அவன்...

நீ விரும்புகிறாயா என்று
உணர்ந்து கொள்ள மறந்து விட்டான்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 13 மே, 2018

மட்டும் அல்ல....

அதிகாலையில் பூத்தது
உன் தோட்டத்துப் பூக்கள் மட்டும் அல்ல..

என் இதயப் பூக்களும் தான்!!!

உன் வருகைக்காய்...

இனியபாரதி.

சனி, 12 மே, 2018

உனைத் தேட...

ஆயிரம் தொலை சென்றால் கூட
ஆனந்தமாய் நான் இருப்பேன்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு!!!

கண்கட்டி வித்தையாய்
வாழ்க்கை கசந்தாலும்
கண்ணீர் சிந்தாமல்
கனவுகளுடன் காத்திருப்பேன்!!!

மறைமுகமாய் நீ இரசித்த
மனதுக்குள் மஞ்சமிட்டு
என் இராத்திரியின் தூக்கத்தைக்
களைத்தவனே!!!!

உனைத் தேடுகிறேன்....

இனியபாரதி.

வெள்ளி, 11 மே, 2018

அவளுக்குக் குடையாய்...

எப்போதும் என்னைக் கண்டு
பூரிப்படையும் அவளுக்கு
நான் ஒரு குடையாய் இருந்து
என்றும் காப்பேன்...

'மழை'

இனியபாரதி.

வியாழன், 10 மே, 2018

அன்பின் ஆழம்...

உனது அன்பின் ஆழம் அறிந்தேன்
என் கண்ணின் நீர் வழியாய்!!!

இனியபாரதி.

புதன், 9 மே, 2018

அமைதியாய்....

நீர் கொடுக்கும்
இன்பங்களையும் துன்பங்களையும்
சகித்துக் கொண்டு
எல்லாவற்றிலும்
அமைதி காண அருள் தா இறைவா!!!

இனியபாரதி.

செவ்வாய், 8 மே, 2018

இன்பங்களை மட்டும்....

உலகில் உள்ள இன்பங்களை மட்டுமே
நீ அனுபவிக்க ஆசைப்பட்டால்...
துன்பங்களின் வலியை நீ அறியாமலே
இருந்து விடுவாயே என்று தான்

அடிக்கடி உனக்குத் துன்பங்களைத் தருகிறேன்....

இனியபாரதி.

திங்கள், 7 மே, 2018

கதை கூறி....

உனக்காக நான் படித்து சொல்லும்
கதைகள் கூட
காதல் விடு தூது தான்!!!!

இனியபாரதி.

ஞாயிறு, 6 மே, 2018

அடிமையாய் இருக்க....

அவனுக்காக அவள் செய்யும் தியாகங்கள்!!!
கொஞ்சம் கூட தான்....

அவன் எதிர் பார்ப்பதை விடவும்
அளவுக்கு அதிகமாகச் செய்யக் கூடிய வளும் அவள் தான்...

அவனை மிகவும் பிடித்ததனால் தான்
இத்தனை தியாகங்களும்...

அவள் அன்பிற்கு ஈடாய் அவனால் எதையும் கொடுத்து சரி செய்ய முடியாது!!!

அதனால் தான் அவன்
காலம் முழுதும் அவள் அடிமையாய் இருக்க முடிவெடுத்து விட்டான்!!!!

இனியபாரதி.

வெள்ளி, 4 மே, 2018

அப்படியே இருக்க....

உனக்காக நான் எழுதும்
ஒவ்வொரு வரியும்
உன் மனதை விட்டு நீங்காமல்
அப்படியே இருக்க
எனக்கும் ஆசை தான்!!!

இனியபாரதி.

வியாழன், 3 மே, 2018

கண்டு கொண்டேன்....

ஆயிரம் காவியங்களில்
கிடைக்காத காதலை
கண்டு கொண்டேன்
உன் கண்களில்...

இனியபாரதி.

புதன், 2 மே, 2018

தனிமையில் ஒரு பயணம்....

யாரும் உடன் வராத
ஒரு தனிமைப் பயணம்
இப்போது அவசியமாக இருக்கிறது!!!

நான் விரும்பும் இடத்தில்...
நான் விரும்பும் உடையில்...
நான் விரும்பும் உணவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டு...
நான் விரும்பும் நேரத்தில் உறங்கிக் கொண்டு...

ஒரு பத்து நாட்கள் இருக்க ஆசை!!!

இனியபாரதி.

செவ்வாய், 1 மே, 2018

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்....

நீ உழைத்துப் பெற்ற ஊதியத்தை
என்று நீ அனுபவிக்கும் உரிமை கிடைக்கிறதோ
அன்று தான் உண்மையான
மகிழ்ச்சியின் நாள்....

இனியபாரதி.