இந்த வருடத்தின் இறுதி நாள். இந்த நாள் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு நிறைந்த நாளாகத் தான் இருந்திருக்கும்.. பெண்கள் இன்று வீட்டைச் சுத்தம் செய்வார்கள்... ஆண்களும் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.
இன்றைய தினத்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால்... இன்று தான் இந்த வருடம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அசைபோட்டுப் பார்ப்போம். அடுத்த வருடம் இதை எல்லாம் செய்வேன் என்று சில குறிக்கோள்களையும் அமைத்துக் கொள்வோம்.
இந்த வருடம் முழுவதும் என்னோடு சுகத்திலும், துக்கத்திலும் பங்கெடுத்த என் இறைவனுக்கு என் முதல் நன்றி. என் குழப்பங்களில் எனக்குத் தெளிவைத் தந்ததற்காகவும் நன்றி.
அடுத்து... நான் இந்த அளவு வளர எனக்குத் துணையாக... என் நிழலாக இருக்கும் என் செல்லம்மா... அம்மா... அப்பா... தங்கை... உறவினர்கள்... நண்பர்கள்... என வரிசை நீண்டு கொண்டு தான் செல்கிறது.
இந்த வருடம் நன்றாகத் தான் சென்றது. கொஞ்சம் சாதனைகள்... நிறைய சோதனைகள்.. ஆனாலும், சோதனையிலும் தளர்வுறாமல் இருக்க உதவி செய்த இறைவன்... இப்படி நன்றாகத் தான் இருந்தது.
அடுத்த வருடமும் நல்ல முறையில் செல்லும் என்று நம்புகிறேன். எனக்கு மட்டுமல்ல... தன் உழைப்பினால் சம்பாதித்து... மற்றவர்கள் வயிற்றில் அடித்து வாழாமல்... சகோதரத்துவத்துடன் வாழும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வருடமும் நல்ல முறையில் தான் அமையும்.
'ஒளியூட்ட' என்ற தலைப்பு எதற்கு? அடுத்த வருடம் நான் எடுத்திருக்கும் விருதுவாக்கு... 'நான் துன்பத்தில், கஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை... மற்றவர் என்னால் பாதிக்கப்படக் கூடாது' இதனால் மற்றவர்கள் வாழ்வில் எப்போதும் வெளிச்சத்தைக் கொடுப்பவளாக மட்டும் இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் புத்தாண்டிற்கு நான் எடுத்திருக்கும்... நான் கடைபிடிக்கப்போகும் வாக்கு.
அனைவருக்காகவும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரோடும் இருந்து அவரது அன்பின் பாதையில் அனுதினமும் வழிநடத்துவாராக!
அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இனியா.