புதன், 28 டிசம்பர், 2016

மாசில்லா குழந்தைகள்...

இன்று மாலை ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இன்று 'மாசில்லா குழந்தைகள்' நவநாள் திருப்பலியுடன் சேர்த்து கொண்டாடப்பட்டது. மாசில்லா குழந்தைகள் - குழந்தைகளுக்காகச் சிறப்பாகச் ஜெபிக்கப்பட்டது.

இன்றைய தின மறையுரையும் அழகாக, சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. 'எதையும் நேர்மறையாகச் சிந்திக்கக் கூடிய ஒரு சிறுவன்'.... என்று தான் மறையுரையை ஆரம்பித்தார், அருட்தந்தை. சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெறவிருந்த நேரம். அவனுக்கு ஆண்டுவிழா நாடகத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசை. அதைத் தன் பெற்றோர்களிடம் கூறுகிறான். அவர்களும் சம்மதிக்கிறார்கள். ஆனால், அவனால் அவ்வளவு சுலபமாக மேடையில் பேசிவிட முடியவில்லை. அதனால் அவனது ஆசிரியர்கள் அவனை நாடகத்திலிருந்து விலக்கி விடுகிறார்கள்... மாலை வீடு வந்ததும், அவன் அம்மா அவனிடம் அன்று நடந்தவைகளைப் பற்றிக் கேட்கின்றார். அவன், 'இந்த வருடம் நாடகத்தில் நான் நடிக்கவில்லை அம்மா... ஆண்டுவிழாவில் பார்வையாளராக இருந்து நடிப்பவர்களை ஊக்குவிக்கப்போகிறேன்'.... என்று சொன்னான்... கதை அவ்வளவு தான்...

கதையிலிருந்து புரிந்து கொண்டது... தனக்கு நல்லது நடக்கவில்லை என்றாலும், அதை எதிர்மறையாக நினைத்து வருத்தப்படாமல் அதையும் தனக்கு சாதகமாக நேர்மறையாக ஆக்கிக் கொண்டான், அச்சிறுவன்.

அவனைப் போல நாமும் எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்று இன்றைய மறையுரையை ஆரம்பித்தார், தந்தை.

குழந்தைகள் - கள்ளம் கபடமற்ற மனம்..... சிரிப்பு...

'எந்தத் துன்பம் வந்தாலும் எந்தன் அன்பு மாறாது' என்ற பாடல் வரி ஞாபகம் வந்தது.

குழந்தை மனம் வேண்டிவந்தேன் இன்று...

எனக்குரியதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலும், அதை நேர்மறையாக எண்ணி, எனக்கென நீர் வைத்துள்ள பொக்கிஷத்திற்காய் காத்திருப்பேன்...

குழந்தை மனம் தாரும் இறைவா!

ஒவ்வொரு தருணமும் நேர்மறையாக சிந்திக்க என்னுடன் இருந்து வழிநடத்தும்!!

இனியா....

கருத்துகள் இல்லை: