வெள்ளி, 30 டிசம்பர், 2016

எல்லாம் நீயே...

தினந்தோறும் கதைகளைக் கேட்டுக் கொண்டே இந்த விடுமுறை நாட்கள் செல்கின்றன.

ஒரு துறவியை செல்வந்தர் ஒருவர் சந்திக்கச் சென்றாராம். அந்தத் துறவியிடம் 'எனக்கென பணம்,புகழ், பதவி, செல்வம் என்று எல்லாம் இருக்கின்றன. ஆனால், என் குடும்பத்தில் மட்டும் சந்தோசம் இல்லை.. எனக்கொரு வழி கூறுங்கள்' என்று கேட்டாராம். அதற்குத் துறவி ஒரு காதிதத் துண்டில் 'இறைவன்' என்று எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவரும் வாசித்தார். அந்தச் செல்வந்தரிடம் ஏதாவது பணம் வைத்திருந்தால் எடுங்கள் என்றார், துறவி. அவரும் அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். துறவி அந்த ரூபாய் நோட்டைக் கீழே வைத்துவிட்டு, அதன் மீது தான் எழுதிய அந்தக் காகிதத்தை வைத்தார். இந்த காகிதத் துண்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை உங்களால் வாசிக்க முடிகிறதா? என்று கேட்டார். ஆம்... முடிகிறது... 'இறைவன்' என்றார்.

பின் அந்தக் காகிதத்தைக் கீழே வைத்து, அதன் மீது அந்த ரூபாய் நோட்டை வைத்தார். இப்போது தெரிகிறதா அதில் என்ன எழுதியிருக்கிறதென்று?' என்றார் துறவி. 'ஒன்றும் தெரியவில்லை' என்றார் அந்தச் செல்வந்தர்.

அந்த நொடி ஞானம் பெற்றுக் கடந்து போனார், அந்தச் செல்வந்தர்.

முதலில் இறைவனை வைக்கும் போது அவர் நமக்குத் தெளிவாய்த் தெரிவார். ஆனால், நாம் பணத்திற்கு மதிப்புத் தந்து அதை முன்னிருத்தும் போது அவர் தெரிவதில்லை. இறைவனை முன்னிருத்தி நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் நமக்கும் வெற்றியும் சந்தோசமும் சமாதானமும் கிடைக்கும்.

இன்று திருக்குடும்பத்திருநாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது, நம் திருச்சபை. குடும்பத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர், தந்தை. நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இறைவனை நம் குடும்பத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவர் பாதையில் நம்மை வழிநடத்தும் நம் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்படிந்து வாழ்ந்து நம் திருக்குடும்பத்தின் மூலமாக மற்றவர் ஆசீர் பெற இந்த நாள் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

உம்மையே எங்கள் குடும்பத்தின் தலைவராக ஏற்று, உம் பாதையில் என்றும் உமக்கேற்ற பிள்ளைகளாய் வாழ வரம் தாரும் இறைவா!

திருக்குடும்பத் திருநாள் வாழ்த்துகள்!

இனியா.

கருத்துகள் இல்லை: