சனி, 25 ஏப்ரல், 2015

என் இனிய எழுத்து...


ஒரு வழியாக அம்மா சென்னையிலிருந்து வந்துவிட்டார்.  நம் அருகில் எப்பொழுதும் இருப்பவர், இல்லாத போது தான் அவரின் அருமை தெரியும். அம்மாவின் அருமையை உணர்ந்து கொண்டேன். ஐந்து நாட்களே தாக்குப்பிடிக்க முடியவில்லை. 

இன்று காலை நான் எழுந்ததும் விழித்தது, ஒரு டைரியின் முகத்தில் தான். சென்னையிலிருந்து என் மாமா எனக்காக கொடுத்துவிட்டிருந்தார், அம்மாவிடம். அந்த டைரியைப் பார்த்ததும், நேற்று நான் படித்த புத்தகத்தில் இருந்த ஒரு கதை தான் ஞாபகம் வந்தது. ஆபிரகாம் லிங்கன் யார் மீதும் தன் கோபத்தைக் காட்ட மாட்டாராம். ஒருவர் மீது கோபம் வந்தால் உடனே தன் டைரியை எடுத்து, அதில் அந்த நபரைத் திட்டி எழுதி மூடி வைத்து விடுவார். பின் அவர் மீது கோபம் குறைந்த பிறகு, அந்த பேப்பரைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுவாராம். இதனால், அவரின் கோபம் குறைவதாகவும் உணர்ந்தாராம். இது தான் அவர் கோபக் கட்டுப்பாட்டின் இரகசியம். இந்த டைரியைப் பார்த்ததும் நாமும் அப்படி எழுதலாமா என்று தோன்றியது. யார் மீதாவது கோபம் வந்தால் அதைக் காட்டத் தான் நமக்கு இரண்டு அடிமைகள் இருக்கிறார்களே! பிறகு என்ன கவலை என்று விட்டுவிட்டேன்.

இன்று இரவு தான், இந்த டைரியில் ஒரு நெடுந்தொடர் எழுதலாம் என்று தோன்றியது. சரி என்று நினைத்து, எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி, இதை என் ஆருயிர் நண்பிக்குப் பிறந்த நாள் பரிசாக அளிக்கலாம் என்று முடிவெடுத்தேன். எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை!!!!

நமக்குத் தான், எழுதுவது என்றால் சொல்லவா வேண்டும்? ஆபிரகாம் லிங்கனைப் போல் அனுபவம் இல்லை. ஆனால், நான் எழுதினால், என் மனப் பாரம் குறைவது போல் ஒரு உணர்வு வரும். அதுவும், நடுஇரவு பாடல் கேட்டுக் கொண்டே நானாக என் டைரியில் கிருக்கித் தள்ளுவது மிகவும் பிடிக்கும். அப்படித் தான் இந்தக் கதையையும் எழுத வேண்டும். 

நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உயிர் இருக்கிறது. 

உணர்ந்து பாருங்கள்!!!

கருத்துகள் இல்லை: