இன்று 'காந்திஜியின் பொன்மொழிகள்' என்ற தலைப்பில் ஆசிரியர். அருள்நம்பி எழுதிய புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. இன்று பாதிப் புத்தகம் தான் வாசிக்க முடிந்தது. நாளை முடித்துவிடுவேன். இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில வரிகள்.
1. கடவுள் அன்பாக உள்ளார்.
'அன்பே சிவம்' என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், அன்பாய் இருப்பதனால் இறைவனைக் காணலாம். இதைத் தான் காந்தியடிகளும் கூறுகிறார். பல நேரங்களில் நாம் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்வோம். வீட்டில் தங்கையை அப்போது தான் அடித்து, சண்டை போட்டிருப்போம். ஆலயத்திற்குச் செல்வோம். இதனால் பயன் என்ன? கடவுள் எந்தக் கோவிலிலும், ஆலயத்திலும் இல்லை. நாம் மற்றவரை அன்பு செய்வதனால் நமக்குக் கிடைக்கும் அந்த ஆத்ம திருப்தி தான் கடவுள்.
2. பிரார்த்தனை என்பது இறைவனுடன் நாம் நேருக்கு நேர் பேச வாய்ப்பளித்துக் கொடுக்கும் ஓர் ஒலி ஊடகம் ஆகும்.
பிரார்த்தனை என்பது கிறிஸ்தவர்களுக்குப் பரிச்சையமான ஒரு வார்த்தை. இதை வாசித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, எங்கள் வீட்டில் என்னைத் தினமும் எழுப்பி விடும் அந்த அலறல் சத்தம் தான்-ஆசீர்வாதம் டீவியிலிருந்து.
பிரார்த்தனை என்பது ஆசிரியர் சொன்னது போல், நாம் இறைவனுடன் உறவாடக் கிடைக்கும் சந்தர்ப்பம்.
நமக்குப் பிடித்தவரிடம், நமக்கு ஏதாவது வேண்டுமென்றால், எப்படி கேட்போம்? அதைப் போலத் தான் பிரார்த்தனையும் அமைய வேண்டும், அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல்.
3. வாழ்க்கை ஒரு நீர்க் குமிழி தான்...
நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல், எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ருசித்து வாழ வேண்டும்.
4. ஹிம்சை, கோழைத்தனம் இவை இரண்டில் சிறந்தது - ஹிம்சை
இவை இரண்டில் சிறந்தது ஹிம்சை. ஆனால், அதை விட அஹிம்சை மிகச் சிறந்தது என்று கூறுகிறார், ஆசிரியர். கோழைத்தனம் - எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று கூட சொல்லலாம். நான் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, இப்போதும் சரி... சில லூசுகளைப் பார்த்தால் கோபமாக வரும். என் மாணவர்களுக்கும் நான் கூறும் அறிவுரை... படிக்காமல் கூட இரு. ஆனால், கோழையாய் இராதே!!! சில ஆண்களைப் பார்த்தால் கூட, இப்படித் தான் இருப்பார்கள். ஆண்கள் என்றால் ஒரு தைரியம், எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் வேண்டும். என் நண்பர்களுக்குக் கூட நான் அடிக்கடி கூறுவது இதுவே!
ஆக, இன்று 50 பக்கங்கள் படித்தேன். பொதுவாக, எனக்கு காந்தி மீது ஒரு அபிப்பிராயமே கிடையாது. பள்ளியில் படிக்கும் போது, என் உற்ற நண்பிக்கு அவரைப் பிடிக்காது. அதனால், நானும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. இன்று செய்தித்தாளில் படித்த ஒரு வரி, என்னைப் பாதித்தது....'ஒருவர் செய்த தவற்றை மற. ஆனால், அந்த நபரை வெறுக்காதே!'
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது தவறு இருக்கும். நாம் அவரிடம் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே?