சனி, 31 டிசம்பர், 2016

ஒளியூட்ட...

இந்த வருடத்தின் இறுதி நாள். இந்த நாள் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு நிறைந்த நாளாகத் தான் இருந்திருக்கும்.. பெண்கள் இன்று வீட்டைச் சுத்தம் செய்வார்கள்... ஆண்களும் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.

இன்றைய தினத்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால்... இன்று தான் இந்த வருடம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அசைபோட்டுப் பார்ப்போம். அடுத்த வருடம் இதை எல்லாம் செய்வேன் என்று சில குறிக்கோள்களையும் அமைத்துக் கொள்வோம்.

இந்த வருடம் முழுவதும் என்னோடு சுகத்திலும், துக்கத்திலும் பங்கெடுத்த என் இறைவனுக்கு என் முதல் நன்றி. என் குழப்பங்களில் எனக்குத் தெளிவைத் தந்ததற்காகவும் நன்றி.

அடுத்து... நான் இந்த அளவு வளர எனக்குத் துணையாக... என் நிழலாக இருக்கும் என் செல்லம்மா... அம்மா... அப்பா... தங்கை... உறவினர்கள்... நண்பர்கள்... என வரிசை நீண்டு கொண்டு தான் செல்கிறது.

இந்த வருடம் நன்றாகத் தான் சென்றது. கொஞ்சம் சாதனைகள்... நிறைய சோதனைகள்.. ஆனாலும், சோதனையிலும் தளர்வுறாமல் இருக்க உதவி செய்த இறைவன்... இப்படி நன்றாகத் தான் இருந்தது.

அடுத்த வருடமும் நல்ல முறையில் செல்லும் என்று நம்புகிறேன். எனக்கு மட்டுமல்ல... தன் உழைப்பினால் சம்பாதித்து... மற்றவர்கள் வயிற்றில் அடித்து வாழாமல்... சகோதரத்துவத்துடன் வாழும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வருடமும் நல்ல முறையில் தான் அமையும்.

'ஒளியூட்ட' என்ற தலைப்பு எதற்கு? அடுத்த வருடம் நான் எடுத்திருக்கும் விருதுவாக்கு... 'நான் துன்பத்தில், கஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை... மற்றவர் என்னால் பாதிக்கப்படக் கூடாது' இதனால் மற்றவர்கள் வாழ்வில் எப்போதும் வெளிச்சத்தைக் கொடுப்பவளாக மட்டும் இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் புத்தாண்டிற்கு நான் எடுத்திருக்கும்... நான் கடைபிடிக்கப்போகும் வாக்கு.

அனைவருக்காகவும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரோடும் இருந்து அவரது அன்பின் பாதையில் அனுதினமும் வழிநடத்துவாராக!

அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இனியா.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

எல்லாம் நீயே...

தினந்தோறும் கதைகளைக் கேட்டுக் கொண்டே இந்த விடுமுறை நாட்கள் செல்கின்றன.

ஒரு துறவியை செல்வந்தர் ஒருவர் சந்திக்கச் சென்றாராம். அந்தத் துறவியிடம் 'எனக்கென பணம்,புகழ், பதவி, செல்வம் என்று எல்லாம் இருக்கின்றன. ஆனால், என் குடும்பத்தில் மட்டும் சந்தோசம் இல்லை.. எனக்கொரு வழி கூறுங்கள்' என்று கேட்டாராம். அதற்குத் துறவி ஒரு காதிதத் துண்டில் 'இறைவன்' என்று எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவரும் வாசித்தார். அந்தச் செல்வந்தரிடம் ஏதாவது பணம் வைத்திருந்தால் எடுங்கள் என்றார், துறவி. அவரும் அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். துறவி அந்த ரூபாய் நோட்டைக் கீழே வைத்துவிட்டு, அதன் மீது தான் எழுதிய அந்தக் காகிதத்தை வைத்தார். இந்த காகிதத் துண்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை உங்களால் வாசிக்க முடிகிறதா? என்று கேட்டார். ஆம்... முடிகிறது... 'இறைவன்' என்றார்.

பின் அந்தக் காகிதத்தைக் கீழே வைத்து, அதன் மீது அந்த ரூபாய் நோட்டை வைத்தார். இப்போது தெரிகிறதா அதில் என்ன எழுதியிருக்கிறதென்று?' என்றார் துறவி. 'ஒன்றும் தெரியவில்லை' என்றார் அந்தச் செல்வந்தர்.

அந்த நொடி ஞானம் பெற்றுக் கடந்து போனார், அந்தச் செல்வந்தர்.

முதலில் இறைவனை வைக்கும் போது அவர் நமக்குத் தெளிவாய்த் தெரிவார். ஆனால், நாம் பணத்திற்கு மதிப்புத் தந்து அதை முன்னிருத்தும் போது அவர் தெரிவதில்லை. இறைவனை முன்னிருத்தி நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் நமக்கும் வெற்றியும் சந்தோசமும் சமாதானமும் கிடைக்கும்.

இன்று திருக்குடும்பத்திருநாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது, நம் திருச்சபை. குடும்பத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர், தந்தை. நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இறைவனை நம் குடும்பத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவர் பாதையில் நம்மை வழிநடத்தும் நம் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்படிந்து வாழ்ந்து நம் திருக்குடும்பத்தின் மூலமாக மற்றவர் ஆசீர் பெற இந்த நாள் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

உம்மையே எங்கள் குடும்பத்தின் தலைவராக ஏற்று, உம் பாதையில் என்றும் உமக்கேற்ற பிள்ளைகளாய் வாழ வரம் தாரும் இறைவா!

திருக்குடும்பத் திருநாள் வாழ்த்துகள்!

இனியா.

வியாழன், 29 டிசம்பர், 2016

மீனு...

கல்லூரியில் படிக்கும் போது எனக்கு ஒரு பேராசிரியரை மிகவும் பிடிக்கும். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது தான் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.. அவருடன் இணைந்து வெளியில் சென்ற தருணங்கள் பல... விடுதியில் சொல்லாமல் கூட, அவருடன் வெளியில் சென்றுள்ளேன்.. அவரது நிச்சயதார்த்தத்திற்குக் கூட நான் சென்றிருந்தேன்.. அன்று இரவு அவருடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டது.. அதன் பிறகு நிறைய நாட்கள் விடுதியில் பிராக்ஜெட் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஞாயிறானால் அவரது வீட்டிற்குத் தான் செல்வேன்...

இன்று அதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது.... சிரிப்பாக இருக்கிறது!

இன்று எதேர்ச்சையாக என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது... அது யாரென்று எனக்குத் தெரியவில்லை... யாரென்று கேட்டு நானும் அனுப்பியிருந்தேன்.. பதில் உன் கல்லூரிப் பேராசிரியர்..... என்று வந்திருந்தது... அதைப் பார்த்ததும் என்னைச் சுற்றி ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வட்டமிட்டது போல் இருந்தது..

உடனே அழைத்தேன்.. அழைப்பை எடுக்கவில்லை... சிறிது நேரத்திற்குப் பின் அவரே அழைத்தார்... நான் எடுக்கவில்லை.... மறுபடியும் நான் அழைத்தேன்... அவர் எடுக்கவில்லை... கடைசியாக அவர் அழைத்தார்... எடுத்துப் பேசினேன்... இன்னும் என் மீனுவும்... அவள் குரல் கூட மாறவில்லை... அவளது ஆங்கில உரையாடல்கள் கூட அப்படியே இருந்தது....

பார்க்க வேண்டும் போல் ஆவலாகத் தான் இருக்கிறது... என்று பார்ப்பேனென்றுத் தெரியவில்லை???

இதில்... என் செல்லம்மாவும் என்னுடன் பேசியது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.. இந்த நாள் அப்படியே இருந்துவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது!

கடந்த நாட்களை நினைத்துப் பார்க்க எனக்கு ஒரு தருணத்தைத் தந்ததற்கு நன்றி இறைவா!

என்னையும் பொருட்படுத்த என் செல்லம்மாவிற்கு நேரம் கொடுத்ததற்கு நன்றி!

இனியா.

புதன், 28 டிசம்பர், 2016

மாசில்லா குழந்தைகள்...

இன்று மாலை ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இன்று 'மாசில்லா குழந்தைகள்' நவநாள் திருப்பலியுடன் சேர்த்து கொண்டாடப்பட்டது. மாசில்லா குழந்தைகள் - குழந்தைகளுக்காகச் சிறப்பாகச் ஜெபிக்கப்பட்டது.

இன்றைய தின மறையுரையும் அழகாக, சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. 'எதையும் நேர்மறையாகச் சிந்திக்கக் கூடிய ஒரு சிறுவன்'.... என்று தான் மறையுரையை ஆரம்பித்தார், அருட்தந்தை. சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெறவிருந்த நேரம். அவனுக்கு ஆண்டுவிழா நாடகத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசை. அதைத் தன் பெற்றோர்களிடம் கூறுகிறான். அவர்களும் சம்மதிக்கிறார்கள். ஆனால், அவனால் அவ்வளவு சுலபமாக மேடையில் பேசிவிட முடியவில்லை. அதனால் அவனது ஆசிரியர்கள் அவனை நாடகத்திலிருந்து விலக்கி விடுகிறார்கள்... மாலை வீடு வந்ததும், அவன் அம்மா அவனிடம் அன்று நடந்தவைகளைப் பற்றிக் கேட்கின்றார். அவன், 'இந்த வருடம் நாடகத்தில் நான் நடிக்கவில்லை அம்மா... ஆண்டுவிழாவில் பார்வையாளராக இருந்து நடிப்பவர்களை ஊக்குவிக்கப்போகிறேன்'.... என்று சொன்னான்... கதை அவ்வளவு தான்...

கதையிலிருந்து புரிந்து கொண்டது... தனக்கு நல்லது நடக்கவில்லை என்றாலும், அதை எதிர்மறையாக நினைத்து வருத்தப்படாமல் அதையும் தனக்கு சாதகமாக நேர்மறையாக ஆக்கிக் கொண்டான், அச்சிறுவன்.

அவனைப் போல நாமும் எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்று இன்றைய மறையுரையை ஆரம்பித்தார், தந்தை.

குழந்தைகள் - கள்ளம் கபடமற்ற மனம்..... சிரிப்பு...

'எந்தத் துன்பம் வந்தாலும் எந்தன் அன்பு மாறாது' என்ற பாடல் வரி ஞாபகம் வந்தது.

குழந்தை மனம் வேண்டிவந்தேன் இன்று...

எனக்குரியதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலும், அதை நேர்மறையாக எண்ணி, எனக்கென நீர் வைத்துள்ள பொக்கிஷத்திற்காய் காத்திருப்பேன்...

குழந்தை மனம் தாரும் இறைவா!

ஒவ்வொரு தருணமும் நேர்மறையாக சிந்திக்க என்னுடன் இருந்து வழிநடத்தும்!!

இனியா....