செவ்வாய், 27 அக்டோபர், 2015

மெய்யான இன்பம்...

என் 2014 ஆம் ஆண்டு டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில், என் கண்ணில் பட்ட வரி ' Joy comes from giving'. சரி. அதை வைத்தே, இன்றைய வலைப்பூவை அலங்கரிக்கலாம் என்று நினைத்தேன். வெகு நாட்களுக்குப் பின் இன்று தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எழுதுவதிலும் படிப்பதிலும் உள்ள சுகம் எதிலும் கிடையாது.
நாவல் படித்து விட்டுத் தன் அன்பர்களிடம் சண்டையிடும் சில அசடுகளும் உண்டு. நாவல் மிகவும் அருமையாக இருந்தது என்று, அதைப் பற்றி மற்றவரிடம் பகிர்ந்து கொள்பவர்களும் வெகுசிலரே. ஆனால், எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு நாவல் படித்தாலும் நோட்ஸ் எடுப்பது. எடுத்தபின் அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது. என் சில கிறுக்கல்கள் கூட அவைகளாகத் தான் இருக்கும்.
நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் '“I too had a love story'. நன்றாக இருந்தது என்றும் சொல்ல முடியாது. நல்லாவே இல்லை என்றும் சொல்ல முடியாது. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அடுத்து என்ன என்று யோசிக்க வைக்கும். மூன்றே இரவுகளில் படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு புத்தகமாக அமையும். ஏற்கெனவே எனக்கு ஒரு கதைப் புத்தகம் எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. இப்புத்தகத்தைப் படித்தவுடன் அது மேலும் அதிகரித்துவிட்டது. என் கதை எழுதும் திறமையை என் வலைப்பூவில்இ சில பதிப்புகளைக் கொடுத்துத் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு அரை மணி நேரமாவது செலவிட வேண்டுமென்று நினைத்துள்ளேன். கடைப்பிடிக்க வேண்டும்.
சரி. நம் அழகிய மேற்கோளுக்கு வருவோம். அழகிய தமிழில் சொல்ல வேண்டுமென்றால்.... ' கொடுப்பதில் தான் உண்மையான இன்பம்' என்பது தான். கொடுப்பது? எதைக் கொடுப்பது? இன்றைய காலத்து இளைஞர்களிடமும் வில்லங்கம் பிடித்த குழந்தைகளிடமும் இந்தக் கேள்வியை மட்டும் கேட்டுவிடக் கூடாது. பின் நாம் தான் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
பெரும்பாலும் நான் உரையாட விரும்புவது... திருமணம் ஆனவர்களிடமும் பெரியவர்களிடமும் தான். அவர்கள் தான் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் விளக்குவார்கள்.
கொடுப்பது...
அன்பைக் கொடுப்பது...
அரவணைப்பைக் கொடுப்பது...
பாசத்தைக் கொடுப்பது,...
பக்குவத்தைக் கற்றுக் கொடுப்பது...
ஆசை முத்தம் கொடுப்பது...
ஆதரவைக் கொடுப்பது...
பகிர்ந்து கொடுப்பது...
நேரத்தைக் கொடுப்பது...
இப்படி கொடுப்பதில் சில நல்லவைகளும் இருக்கின்றன. சில தீயவைகளும் இருக்கின்றன. நாம் இன்று நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு நாள் இரவு தூங்கப் போவதற்கு முன் இரண்டு நிமிடங்கள் மௌனமாக... இன்று நான் எதை மற்றவருக்குக் கொடுத்தேன் என்று சிந்திப்போம். நான் கொடுத்ததில் ஏதாவது இரண்டாவது நேர்மறையானவையாக இருக்கின்றனவா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இல்லையைன்றால்... அவற்றை நேர்மறையாக்க நாளையாவது முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வோம். என்றாவது ஒரு நாள் நாம் கொடுக்கும் அனைத்தும் நேர்மறையானவையாக மாறிவிடும்.
கொடுப்பதற்கு பணக்காரராக இருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது என்பதை முதலில் திட்டமிடுங்கள். அடுத்து... அதை யாருக்குக் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுங்கள். அதன் பிறகு செயல்படுங்கள். கண்டிப்பாக... கொடுப்பதில் இன்பம் அடைவீர்கள்!

கருத்துகள் இல்லை: