இது பைபிளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி. இதை அநேக முறை படித்திருக்கிறேன். ஆனால், இன்று தான் இதை உணர்கிறேன்.
எங்களுக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர்.. மூன்று முறை அல்லது நான்கு முறை சந்தித்திருப்போம். எங்கள் ஆலயத்திற்கு வந்திருக்கிறார். அவருடன் பேசியிருக்கிறோம்.. அவருடன் சேர்ந்து மதிய உணவு அருந்தியிருக்கிறோம்.. அவர் எங்களுக்கு ஒரு நல்ல நண்பர். இது நடந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் இருக்கும். அதன் பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், எங்காவது அவர் பெயரைக் கேட்டால் அவர் எங்கள் நண்பர் என்று சொல்லிக் கொள்வோம்.
இன்று அதிகாலை ஆறு மணி இருக்கும். எனது நண்பன் ஒருவனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இன்று காலை இரண்டு மணிக்கு திண்டுக்கல் சாலையில் நடந்த விபத்தில், எனக்குப் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்றும், அவருக்காக வேண்டிக் கொள்ளச் சொல்லியும் அந்தக் குறுஞ்செய்தி இருந்தது.
அந்த நிகழ்ச்சியைக் கேட்டதிலிருந்து, என் மனதிற்குள் ஒரே நெருடல்... அவரது இறப்பு என்னுள் ஒரு கொடுக்கு போலக் கொட்டிக் கொண்டு இருக்கிறது. சில நாட்கள் பழகிய எங்களுக்கே இப்படி இருக்கும் போது, அவரது பெற்றோர்களின்... உறவினர்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தால் அழுதுவிடுவேன்.
1.அவர் கொடைக்கானலிலிருந்து எந்த எண்ணத்துடன் மதுரையை நோக்கி வந்திருப்பார்?
2. வரும் போது யாரிடமெல்லாம் சொல்லிவிட்டு வந்திருப்பார்?
3. ஒருவேளை ஜெபம் செய்யாமல் வந்திருப்பாரோ?
4. ஒருவேளை அவர் நல்லவர் என்பதால் சீக்கிரம் எடுத்துக் கொள்ளப்பட்டாரோ?
5. இளவயதுக்காரர் என்பதால் அவர் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாகத் தான் தெரியும்!!
6. கிளம்புவதற்கு முன் தன் நண்பருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்திருக்கலாம்!!
7. காரில் வரும்போது அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம்!!!
இப்படிப் பலவாறு நாம் யோசிக்கலாம்.
ஆனால், அவருடைய இறப்புச் செய்தி ஒரு கொடுக்கைப் போலக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் இந்த நெருடல்.
நாம் எவ்வளவு பெரியவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நிறைய கனவுகள்
நிறைய ஆசைகள்
நிறைய ஏக்கங்கள்
நிறைய செல்வங்கள்
நிறைய சொந்தங்கள்
எல்லாம் இருந்தாலும் உயிர் இல்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை... அந்த ஒரு உயிர் இல்லை என்றால் 'பிணம்' 'Dead Body'.
நமக்கே நிரந்தரமில்லாத இந்த ஒரு உயிர். ஆனால், அந்த உயிர் இருக்கும் போது
எவ்வளவு ஆட்டம்?
எவ்வளவு கோபம்?
எவ்வளவு எரிச்சல்?
எவ்வளவு பேராசை?
எவ்வளவு வஞ்சகம்?
இதெல்லாம் எதற்காக? கண் இமைக்கும் நொடியில் நமது உயிர் போய் விடுகிறது. நம் சாவு நம் கையில் இல்லை.. பின் ஏன் பிடிவாதங்கள்? கோபங்கள்? சண்டைகள்? சச்சரவுகள்?
இருக்கும் ஒரு வாழ்க்கையை செம்மையாக, சந்தோசமாக, மற்றவர்களுடன் சமாதானமாக, கோபமில்லாமல், சண்டையில்லாமல், பிடிவாதமில்லாமல் வாழ்ந்து செல்வோம்.
சாவுக்கு இவ்வளவு பெரிய கொடுக்கு இருப்பதை, இன்று தான் உணர்ந்து கொண்டேன்!!!
இனியா.