உன்னைப் பார்த்த முதல் நாள்
'இது யார் குழந்தை?' என்று கேட்டேன்.
அடுத்த நாளே உன்னைத் தூக்கிக்
கொஞ்ச ஆவல் கொண்டேன்!
என் தாயிடம் 'அந்தக் குழந்தையைத்
தூக்கி வாருங்கள்!' என்று கட்டளையிட்டேன்.
உன்னை என் கையில் ஏந்திக் கொண்டு
நான் கூறிய முதல் வார்த்தை 'கைவிரல்கள் குட்டியாக
எவ்வளவு அழகாய் உள்ளன!' என்று.
இரண்டாவது நான் கேட்டது 'இவள் பெயர் என்ன?'
என் அம்மா கூறியது என்னவோ... 'சிவ ஹர்ஷினி'
நாங்கள் அழைக்க ஆரம்பித்தது என்னவோ.... 'அம்லு' என்று.
உன்னை எந்தப் பட்டப்பெயர் சொல்லிக்
கூப்பிட்டாலும் பொருந்தும் தான்!
உனக்கு நான் வைத்த பட்டப்பெயரான 'ஜீஜீ குட்டி'
கூட அழகு தான்!
மாலை பள்ளி முடிந்து வரும் வழியில்
என் கண்கள் தேடுவது என்னவோ உன்னை மட்டும் தான்!
'என் அம்லு எங்கே?' என்று தான் கேட்பேன்.
நீ இருந்தால் உன்னைத் தூக்கி அணைத்துக்கொள்ளும் போது
கிடைக்கும் சுகத்தில்
என் கவலைகள் அனைத்தையும் மறந்துவிடுவேன்!
உன்னை யாராவது வைத்திருந்தால்
அவர்களிடமிருந்து நீ எப்போது என்னிடம் வருவாய்
என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!
உனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால்
உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்!
சில நாட்கள் பள்ளியிலிருந்து என் அம்மையை
அழைத்து உன்னைப் பற்றி நலம் விசாரித்த
நாட்களும் உண்டு!
நீ தூங்கும் அழகை வருணிக்க வார்த்தைகள்
தமிழில்
இனி புதிதாய்த் தான் கண்டுபிடிக்க வேண்டும்!
நான் பார்க்கத் துடிக்கும்
ஸ்விட்சர்லாந்து குளிரைவிட
உன் தூக்கத்தின் ஸ்பரிசம்
என்னைக்
கொள்ளை கொள்ளச் செய்கிறது!
நீ தூங்கும் போது உன் கையில்
நான் இட்ட கோலங்கள்
உன் விரலுக்கு நான் இட்ட நகப்பூச்சுகள்
நீ விழித்தபின் அதைப் பார்க்கும் ஆச்சரியம்!
அனைத்தும் அழகே!
உன்னை மட்டுமே அதிகமாக கிளிக் செய்த
என் மொபைல் போனில்
நீ கேட்கும் உனக்குப் பிடித்தமான பாடல் 'டன்டனக்கா டன்டனக்கா'
உனக்காகத் தான் நான் தரவிறக்கம் செய்தேன்
என்பது உனக்குத் தெரியுமா?
உன்னையும் என்னையும் பார்த்து
சிலர்
உன் குழந்தையா என்று கேட்கும் அளவிற்கு
நீ என்னுடன் எப்படி இவ்வாறு ஒன்றித்தாய்?
உன்னைத் தூங்க வைக்க சிலநேரம்
நான் படும் பாட்டை நினைக்கும் போது
சிரிப்பாய் வருகிறது!
உன் வாயில் அதிக நேரம் ஒதுக்கி வைத்து
நீ உணவை உண்ணும் விதம்
உனக்கு மட்டுமே உரித்தானது!
உனக்குத் தினமும் மையிடுகிறேன்
நான் உன்னைக் கண் போட்டுவிடக் கூடாது
என்பதற்காக!
உன் சிணுங்கல்களை ரெக்கார்ட் செய்கிறேன்
உன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க!
இரவு தூங்கி இருப்பாயா என்று
என் வீட்டில் அமர்ந்து கொண்டு
உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
மறுநாள் காலை உன்னை எப்போது
சந்திப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருப்பேன்
உன் வீட்டின் தாழ்பாளைப் பார்த்துக் கொண்டே!
நீ விளையாடும் அழகும்
அழும் அழகும்
கூட
நான் இரசிக்கும் விசயங்களே!
என்றும் என் அம்லுவாக
உன்னை
என் மடியில்
என் தோளில்
தூக்கிச் சுமக்க ஆசை!!!
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
என் அன்புக்குட்டி அம்லுவிற்கு....
திங்கள், 25 ஏப்ரல், 2016
அறிவுப் பசி...
இந்த நோயை மட்டும்
தேடிப் பெற்றுக் கொள்ள ஆசை!
நான் வேண்டாமென்று ஓடினாலும்
என்னை விட்டுச் சென்று விடாதே!
நீ என்னைவிட்டுப் போக
நான் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள மாட்டேன்!
என்னை நோயின் உச்சத்திற்கு
எடுத்துக் கொண்டு போ!
அப்போது தான் உன்னைப் பற்றி
நன்கு அறிந்து கொள்ள முடியும்!
நீ வேண்டாமென்று ஒதுக்கியவர்களிடமிருந்து
என்னிடம் வந்துவிடு!
உன்னை வரவேற்க என் மனக்கதவு
என்றும் திறந்திருக்கும்!
நீ தாக்கிய மனிதர்களிடம் தான்
அதிகம் பழக மனம் துடிக்கிறது!
அவர்களிடம் நீ இருப்பதாலேயே
அவர்களை விரும்பவும் செய்கிறேன்!
நீ இருப்பதாலேயே ஒருவரை
விரும்புகிறேன்
என்றால்
உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று பார்!
நீ என்னைக் கண்டுகொள்ளாத போதும்
நீயே எனக்கு வேண்டும் என்று
உனக்காய்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
என்னை ஏமாற்றாமல் என்னிடம் வந்துவிடு!
நீ என்னுடன் இருந்தால் போதும்!
எல்லாம் என்வசம் தான்!
என்றும் உனக்காய் ஏங்கித் தவிக்கும்
என்னைக் கண்டு கொள்!