புதன், 23 அக்டோபர், 2013

கல்வியே செல்வம்

பள்ளியில் நாம் படிக்கும் போது, நம் வகுப்பில் சிறந்த மாணவரிடம் தான் நாம் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைப்போம். அவருடன் சண்டை வந்தால் கூட, நாம் சீக்கிரம் சமரசம் செய்து கொள்வோம். அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதற்கு முக்கிய காரணமே, அவர் நன்றாகப் படிப்பது தான்.

இவ்வாறு பள்ளியில் ஆரம்பிக்கும், படித்தவர்களின் நட்பு என்ற ஒன்று, கல்லூரிகளிலும் இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்வேன்.  கல்லூரியைப் பொறுத்தவரை, வகுப்பில் 30 பேர் இருப்பார்கள். வகுப்பில் உள்ள 30 பேரும் நல்ல தோழமையுடன் தான் இருப்பார்கள். ஆனால், இங்கு பேராசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்கள். நன்றாகப் படிக்கிற மாணவரிடம் தான் அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வார்கள். நமக்கே inferiority complex(தாழ்வு மனப்பான்மை) யை வரச் செய்து விடுவார்கள். அப்பொழுது தான் நமக்குத் தோணும், நாமும் நன்றாகப் படித்திருக்கலாமோ என்று! இவ்வாறு, சிலருக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிற, படிப்பு என்கிற விஷயம், வேலை பார்க்கும் இடங்களிலும், நம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது.

ஆகவே, கல்வி தான் மிக முக்கியமான ஒன்று. படித்தவர் என்றால், எப்பொழுதும் தனி மரியாதை தான். படிப்பிற்கு முதலிடம் கொடுப்பவர்கள் நம்மில் அநேகம். கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர்வதோடு, அறியாமையில் இருப்பவர்களுக்கும் நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அநேக இடங்களில், கற்பதற்கு இடங்கள் இருக்கின்றன. ஆனால், சரியான கல்வி முறை அமைவதில்லை. நாம், கற்கும் கல்வியானது, நமக்கு ஞானத்தையும், அறிவையும் புகட்ட வேண்டும். வெறும் அறிவு மட்டும் கல்வியாகாது.  ஞானமும் வேண்டும். ஞானம் என்றால், ஏதோ அறிஞரிடமும், விஞ்ஞானிகளிடமும் இருந்து கிடைப்பது இல்லை. நம்மில் இருக்கும் அறிவை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் உபயோகிப்பது தான் ஞானம். ஞானத்தை விவேகம் என்று கூட சொல்லலாம். இவ்வாறு, நல்ல ஞானத்தையும், அறிவையும் கொடுக்கக் கூடிய கல்வியே சிறந்த செல்வம்.

கருத்துகள் இல்லை: