வியாழன், 31 அக்டோபர், 2013

வெற்றுப் பாத்திரம்

ஒரு நாள்
பேராசிரியர் பெரிய, வெற்று கண்ணாடிக் குடுவை மற்றும் சில பாத்திரத்தில் கற்கள், மணல் என்று எடுத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுழைகிறார்.  பேராசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்கள் அவரின் கைகளில் இருந்த பொருட்களைப் பார்த்து நகைத்தனர்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு வகுப்பு தொடங்குகிறது.
ஆசிரியர், பெரிய பெரிய கற்களைக் கொண்டு பாட்டிலை நிரப்புகிறார். நிரம்பியதும், மாணவர்களிடம்,
"இந்தப் பாத்திரம் நிரம்பி விட்டதா?" என்று கேட்கின்றார்.
"ஆம்" என்று பதில் மொழி கிடைக்கின்றது.
பின், சிறிய கற்களை பாட்டிலில் போடுகின்றார். அந்த சிறிய கற்கள் பெரிய கற்களால் அடைக்க முடியாத இடத்தை அடைத்தன.
இப்பொழுதும் மாணவர்களிடம் அதே கேள்வி.
"இந்தப் பாத்திரம் நிரம்பி விட்டதா? " - ஆசிரியர்.
"ஆம்" - மாணவர்கள்.
பின், கொண்டு வந்த மணலைப் பாட்டிலில் போடுகின்றார். மணலானது பாட்டிலின் எஞ்சிய இடத்தை அடைத்தது.
இப்பொழுதும் மாணவர்களிடம், "பாட்டில் நிரம்பியுல்லதா? " என்கிறார்.
மாணவர்கள் விரக்தியுடன் ஆம் என்கின்றனர்.
அடுத்ததாக,
நீரை எடுத்து பாட்டிலில் ஊற்றுகிறார். மணல் நீரை உறிஞ்சுகிறது. இப்பொழுதும் பாட்டில் நிரம்பித்தான் இருக்கிறது.
மாணவர்களுக்கு பொறுமை இல்லை.
"இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க சார்?"
இந்த வெற்று பாட்டிலின் மூலம் நாம் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பாத்திரம் உன் வாழ்க்கையைக் குறிக்கிறது.
பெரிய கற்கள் குறிப்பது
உன் குடும்பம்
குழந்தைகள்
நண்பர்கள்
மற்றும்
உடல் நலம்
இந்தச் சிறு கற்கள் குறிப்பது
உன் வேலை, வீடு, வாகனம் போன்ற தேவைகள்
மணல் உணர்த்துவது உன்னுடைய மற்ற சிறு சிறு தேவைகள்.
நீ முதலாவது, மணலைக் கொண்டு பாட்டிலை நிரப்பி இருந்தால், கற்களை நிரப்ப இடம் இருந்திருக்காது. வாழ்விலும் இதே நிலை தான்.
நீ உன்னுடைய நேரத்தையும், திறனையும் சிறிய காரியங்களுக்காக செலவிட்டால், உன்னை மகிழ்விக்கக் கூடிய பெரியவற்ற்றில் உன்னால் ஈடுபாடு செலுத்த முடியாது
குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
இரவு உணவை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் உண்ணுங்கள்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். மனைவி, கணவருடன் மனம் விட்டு பேசுங்கள்.
பெரிய காரியங்களான இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பின்
மணலைப் போன்ற சிறிய காரியங்களை நிரப்ப இடம் கிடைக்கும்.
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.
மற்றவை எல்லாம் வெறும் மணல் தான்.
ஒரு மாணவன் ஆசிரியரிடம்,"அப்போ தண்ணீர் எதற்கு ஊற்றுனீர்கள்?"
நீ எதைக் கொண்டு நிரப்பி விட்டும், தண்ணீரை உற்றினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும்.
அதைப் போலத் தான் மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படத் தேவை இல்லை.
நீ முதலில் எதைக் கொண்டு பாட்டிலை நிரப்புகிறாய் என்பதைப் பொறுத்து தான் அடுத்த நிலை அமைகின்றது.
உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், உனக்காக உருவாக்கப் பட்டது.
உனக்கு அளிக்கப்பட்ட கொடை.
அதை நன்றாகப் பயன்படுத்துங்கள்.
இது தான் இந்தப் பொருட்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.
பெரிய காரியங்களாக நம் வாழ்வில் நினைக்கும் சில விஷயங்கள் உண்மையில் சிறியவையாக இருக்கும்.
இதனால்
உண்மையில் பெரிய காரியங்கள் எதுவென்று யோசிக்க வேண்டும்.
மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
பெரும்பாலும்  சாதித்தவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தோற்று விடுகிறார்கள்.
வாழ்க்கையில்  ஜெயித்தவர்கள் தான் உண்மையாகவே வெற்றி கண்டவர்கள்.

கை தட்டலுடன் அன்றைய வகுப்பு முடிகிறது.

புதன், 23 அக்டோபர், 2013

கல்வியே செல்வம்

பள்ளியில் நாம் படிக்கும் போது, நம் வகுப்பில் சிறந்த மாணவரிடம் தான் நாம் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைப்போம். அவருடன் சண்டை வந்தால் கூட, நாம் சீக்கிரம் சமரசம் செய்து கொள்வோம். அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதற்கு முக்கிய காரணமே, அவர் நன்றாகப் படிப்பது தான்.

இவ்வாறு பள்ளியில் ஆரம்பிக்கும், படித்தவர்களின் நட்பு என்ற ஒன்று, கல்லூரிகளிலும் இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்வேன்.  கல்லூரியைப் பொறுத்தவரை, வகுப்பில் 30 பேர் இருப்பார்கள். வகுப்பில் உள்ள 30 பேரும் நல்ல தோழமையுடன் தான் இருப்பார்கள். ஆனால், இங்கு பேராசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்கள். நன்றாகப் படிக்கிற மாணவரிடம் தான் அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வார்கள். நமக்கே inferiority complex(தாழ்வு மனப்பான்மை) யை வரச் செய்து விடுவார்கள். அப்பொழுது தான் நமக்குத் தோணும், நாமும் நன்றாகப் படித்திருக்கலாமோ என்று! இவ்வாறு, சிலருக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிற, படிப்பு என்கிற விஷயம், வேலை பார்க்கும் இடங்களிலும், நம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது.

ஆகவே, கல்வி தான் மிக முக்கியமான ஒன்று. படித்தவர் என்றால், எப்பொழுதும் தனி மரியாதை தான். படிப்பிற்கு முதலிடம் கொடுப்பவர்கள் நம்மில் அநேகம். கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர்வதோடு, அறியாமையில் இருப்பவர்களுக்கும் நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அநேக இடங்களில், கற்பதற்கு இடங்கள் இருக்கின்றன. ஆனால், சரியான கல்வி முறை அமைவதில்லை. நாம், கற்கும் கல்வியானது, நமக்கு ஞானத்தையும், அறிவையும் புகட்ட வேண்டும். வெறும் அறிவு மட்டும் கல்வியாகாது.  ஞானமும் வேண்டும். ஞானம் என்றால், ஏதோ அறிஞரிடமும், விஞ்ஞானிகளிடமும் இருந்து கிடைப்பது இல்லை. நம்மில் இருக்கும் அறிவை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் உபயோகிப்பது தான் ஞானம். ஞானத்தை விவேகம் என்று கூட சொல்லலாம். இவ்வாறு, நல்ல ஞானத்தையும், அறிவையும் கொடுக்கக் கூடிய கல்வியே சிறந்த செல்வம்.