புதன், 24 பிப்ரவரி, 2016

மதிப்பிடாதே!

அநேக நேரங்களில், நாம் வெளித்தோற்றத்தை வைத்து மட்டும் தான், மற்றவர்களை மதிப்பிடுவோம். வெளித்தோற்றம் எப்போதும் ஏமாற்றும் பண்பு கொண்டது. அதை நம்பிக் கெட்டவர்கள் பலர். உதாரணமாக,  கோவிலுக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஒரு முதியவர் காலணியுடன், உள்ளே சந்நிதானத்திற்கு முன்பு நிற்கிறார். அவரை நான் காண்கிறேன். அவர் மீது கோபம் கொண்டு, என் அருகில் இருந்த நண்பர்களிடம், 'கோவிலுக்குள் செருப்புடன் வருவதே தவறு. இவர் எப்படி இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்' என்று கூறுகிறேன். என் நண்பர்களும் அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, 'வயதான இவர்களே இப்படிச் செய்தால் நாமும் இப்படித் தானே இருப்போம்!' என்று பேசி விட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்கின்றனர்.
ஆக.. இந்த இடத்தில் அந்த முதியவர், அனைவருக்கும் ஒரு கேள்விக் குறியாக, ஒரு தவறானவராகச் சித்தரிக்கப்படுகிறார்.
ஆனால்... உண்மை என்னவென்றால்... 'அவருக்குச் சர்க்கரை வியாதி என்பதால், அவர் வீட்டினுள் இருக்கும் போதே செருப்புடன் தான் இருப்பார். வெளியில் வரும்போது ஒரு சோடி, கோவிலுக்கு வரும் போது ஒரு சோடி என்று தனித்தனியாக வாங்கி வைத்திருக்கிறார்'. இது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இதை அவர் யாரிடம் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், அந்தக் கோவிலில் நான் அவரிடம் நேரடியாகக் கேட்டிருந்தால், எனக்கு ஒருவேளை பதில் கிடைத்திருந்திருக்கும். நானும் அவரைத் திட்டியிருக்கமாட்டேன்.
இப்படிப் பல விசயங்கள் உள்ளன.
ஒருவரைப் பார்த்தவுடன் இவர் கெட்டவர் தான் என்று முடிவெடுப்பது. ஒரு சிலரைப் பார்த்தவுடன், இவர் மிகவும் நல்லவர் என்று நம்பி எல்லா இரகசியங்களையும் கொட்டிவிடுவது.
ஒருவரைக் கெட்டவர் என்றோ  நல்லவர் என்றோ மதிப்பிடும் உரிமையை, இறைவன் நமக்குத் தரவில்லை...
மனிதர்களை அவர்கள் இருப்பது போல் ஏற்று வாழக் கற்றுக் கொள்வோம்.
ஒருவரைப் பற்றிய தவறான கருத்துடன் வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு, அவரிடமே சென்று நேரடியாக விசாரிப்பது சாலச் சிறந்தது.
இந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய, நான் இரசித்த ஒரு வரி...
'அதிகமாகப் பேசுவதைவிட,  ஆழமான கருத்துகளைப் பேசுவதை விட, நேருக்கு நேர் வெளிப்படையாகப் பேசுவதே சாலச் சிறந்தது.'

இனிய காலை வணக்கங்களுடன்...
இனியா.