உடைந்த நிலாக்கள் என்ற பா.விஜய் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து நான் ரசித்த சில வரிகள்.
1). துணிவு இல்லாதவன் கையில்
ஆயுதம் என்பது
புல்!
துணிவு உள்ளவன் கையில்
புல் என்பது
ஆயுதம்!
2). கவிதை உச்சகட்டத்திற்குப்
போகும் போது
எளிமையாகிவிடும்!
இசை உச்சகட்டத்திற்குப்
போகும் போது
கண்ணீராகிவிடும்!
காதல் உச்சகட்டத்திற்குப்
போகும் போது
ரூபமற்றதாகிவிடும்!
3). மனம் என்பது உணர்ச்சி வகுப்பு!
அறிவு என்பது பயிற்சி வகுப்பு!
மனம் சொல்வதை அறிவு கேட்டால் சுயநலம்!
அறிவு சொல்வதை மனம் கேட்டால் பொதுநலம்!
4). அன்பின் கண்களுக்கு
அஃறிணையும் உயர்திணை தான்!
5). பேசமாட்டான் வீரன்!
கொல்லமாட்டான் வள்ளல்!
செய்யமாட்டான் அறிவிலி!
6). காதல்!
ஞானிக்கு வந்தால்
பைத்தியம் ஆக்குகிறது!
பைத்தியத்திற்கு வந்தால்
ஞானி ஆக்குகிறது!
7). சத்தத்தால் பார்ப்பதும்
பார்வையால் சத்தமிடுவதும்
காதலில் சாத்தியம்.
8). காதல் என்பது
காற்றாட்டின் வேகம் கொண்ட
கவிதை!
சூரியனின் வெளிச்சம் கொண்ட
பனித்துளி!
இமயத்தின் எடை கொண்ட
பஞ்சு!
வானத்தின் நீளம் கொண்ட
அணு!
ஆம்! இந்தக் காதல் -
உறை நிலைக்குப் போன
நெருப்பு!
உருகும் நிலைக்குத் தள்ளும்
குளிர்!
9). புன்னகை என்பது
மகிழ்ச்சியின் பாதி!
இன்பத்தின் மீதி!
கவலை என்பது
வருத்தத்தின் பாதி!
சோகத்தின் மீதி!
வெற்றி என்பது
முயற்சியின் பாதி!
நம்பிக்கையின் மீதி!
கண்ணீர் என்பது
தவிப்பின் பாதி!
வேதனையின் மீதி!
அச்சம் என்பது
இயலாமையின் பாதி!
இன்மைகளின் மீதி!
காதல் என்பது
சொர்க்கத்தின் பாதி!
துக்கத்தின் மீதி!
10). நினைவுகள்-கனவுகளாகும்போது
அந்தக் கனவுகளே ஆறுதலாக இருக்கும்!
11). வாழும்போதும்
வாழ்ந்து முடியும்போதும்
சரியான சமூக அந்தஸ்து வழங்கத் தவறும்
உலகம்
வாழ்ந்து முடிந்த பிறகு
சிலை வைக்கிறது.
12). இரசித்தல் என்பது
அளவு குறைகையில்
துறவறம்!
இரசித்தல் என்பது
அளவு மிகுந்து போகையில்
வக்கிரம்!
13). ஆசைகள் மட்டும்
இல்லாமல் இருந்திருந்தால்
ஆதாம்-ஏவாளுக்குப் பிறகு
மனிதன் இருந்திருக்க மாட்டான்!
14). எதையுமே
அடைந்து விட்டவனைவிட
அடையப் போகிறவனுக்கே
ஆர்வம் மிகும்!
15). ஒரு பிரச்சினையில்
ஓர் ஆண் முதலில்
தைரியமடைந்து பிறகு
அதைரியமடைகிறான்!
ஒரு பிரச்சினையில்
ஓர் பெண் முதலில்
அதைரியமடைந்து பிறகு
தைரியமடைகிறாள்!
---நன்றி ஆசிரியர் அவர்களே!