கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட அனைவரும் கூடிக் கொண்டிருந்த வேளை. ஆலயத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அமர்ந்திருந்த அந்த வேளை என் மனதில் ஆயிரம் கேள்விகள். இன்று நாம் கொண்டாடப்போகும் கிறிஸ்துமஸ் விழாவால் எனக்கு என்ன பயன், என் குடும்பத்திற்கு என்ன பயன், என் உறவுகளுக்கு என்ன பயன், என் நண்பர்களுக்கு என்ன பயன் என்று யோசித்தேன்.
வருடா வருடம் ஒன்று மட்டும் உறுதி. புத்தாடைகள் அணிவது. அதைத் தவிர வேறு ஒன்றும் என்னிலும் மாறவில்லை, என் குடும்பத்திலும் இல்லை, என் உறவுகளிலும் மாறவில்லை, என் நண்பர்களிலும் மாறவில்லை.
முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். பின், என் குடும்பம், உறவு மற்றும் நண்பர்களை மாற்றலாம் என நினைத்தேன்.
என்னில் எதை நான் மாற்றிக் கொள்வது?
என்னிடம் பழகும் பலர், சில நாட்களாக என்னிடம் சொல்வது.... 'நீ அதிகமாகக் கோபப்படுகிறாய்... எரிச்சல் படாதே... அனைவர்மீதும் அன்பாய் இரு' என்று.
நான் ஏன் கோபப்படுகிறேன்? ஒருவர் மீது மட்டும் அன்பு காட்டுவது... அந்த நபர் என்னிடம் பேசவில்லை என்றால் எரிச்சல். எனவே பிறர் மீது அன்பற்ற நிலை... நானே என்னைத் திட்டிக் கொண்டேன்.
இந்த நிலையை என்னிலிருந்து மாற்ற வேண்டுமென்று நினைத்தேன். அனைவர் மீதும் கபடமற்ற அன்பைச் செலுத்த வேண்டும். பிறர் என்னை அன்பு செய்ய நினைப்பதை விட நான் அவர்களை அன்பு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். என் கோபத்தைக் குறைத்துக் கொள்ள என் மனதை நல் வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த வருடம் என்னை மாற்றிக் கொள்கிறேன். பின், என் மற்றவற்றைப் பார்க்கிறேன். பாலன் இயேசுவின் பிறப்பு.... என் வாழ்விலும், உங்கள் வாழ்க்கையிலும் குறைந்தது ஒரு மாற்றத்தையாவது ஏற்படுத்தட்டும்....
இனிய கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்கள்...