வெள்ளி, 27 செப்டம்பர், 2013

புள்ளி - கோடு

சமீபத்தில் என் நண்பர் ஒருவர்   எழுதிய புள்ளி, கோடு பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். அழகாக, அருமையாக இருந்தது, அவருடைய எண்ணங்கள்.
நண்பரின் வரிகள்
"புள்ளி ஒன்றின் வசீகரத்தில் மயங்கி அதைக் காதலிக்கத் தொடங்குகிறது ஒரு நேர்கோடு. புள்ளிக்கோ கோட்டினைப் பிடிக்கவேயில்லை. கோடு என்பது மந்தமான, செயலற்ற, பிடிவாதமான ஒன்று என நினைக்கிறது புள்ளி. கோடாக இருப்பதில் தனித்துவமில்லை என்று அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது புள்ளி. புள்ளியைக் கவர்வதற்காக பல்வேறு வடிவங்களில் தன்னை வளைக்கின்றது கோடு. முன்பின் ஆடுகின்றது. தன்னையே வளைக்கின்றது. எப்படியாவது புள்ளியை கரெக்ட் பண்ண நினைக்கிறது கோடு. இந்த விளையாட்டில் புள்ளி என்பது அசைவில்லாத, தன்னை மையப்படுத்திக் கொள்கின்ற உளவியல் கூறு என்றும், கோடு என்பது நமது மாறக்கூடிய தன்மை என்றும் நமக்குப் புரிகிறது. மாறாத கடினத்தன்மை புள்ளி. மாறுகின்ற நெகிழ்வுத்தன்மை கோடு. இந்தக் காதல் நாடகத்தின் முடிவில் புள்ளி கோட்டினை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அத்துடன் கோட்டின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. "

"கோட்டின் வளர்ச்சி அத்துடன் நின்று விடுகிறது" - எதார்த்த வரி.
ஆனால், இது மிகப் பெரிய அர்த்தங்களைத் தருகிறது. ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளியை அடைவதுடன், ஒரு கோட்டின் வளர்ச்சி நின்று விடுகிறது.

கோடானது ஒரு பெண் என்று வைத்துக் கொள்வோம். ஒரு புள்ளி, தன் வீடு.  மறுபுள்ளி, தான் காதலிப்பவன்(கணவன்). தன் வீட்டில் இருக்கும் போது, சுதந்திரமாக, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஏன் என்றால், முடிவுப்புள்ளி நமக்குத் தெரிவதில்லை.

முடிவுப்புள்ளி தெரிந்ததும், இரு புள்ளிகளுக்கு இடையில் மாட்டிக்கொள்கிறது கோடு.
அதாவது, பெண்ணானவள் தன் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட் டிக்கொள்கிறாள். இரண்டு புள்ளிகளை மீறி வேறு எங்கும் செல்ல முடியாது. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில்,அது எவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அவ்வாறெல்லாம் இருக்கலாம். அது தான் அழகும் கூட. ஏதோ என் நண்பன் எழுதியதைப் பார்த்ததும் யோசித்தேன். 
இதைப் பற்றி யோசிக்கும் போது நிறைய எண்ணங்கள் மனதினுள் ஓடும்.

யோசிக்கத் தூண்டிய நண்பருக்கு நன்றி!!!

புள்ளி கோடு புள்ளி