திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மௌனம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வார்கள். “மௌனம்” என்ற வார்த்தையை கேட்டவுடன், மனதிற்குள் அமைதி  எழுகின்றது. மௌனம், தன்னுள் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மௌனம், அது உணரப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது.
சாதாரணமாக, சிலர் எப்பொழுதும் மௌனமாகவே இருப்பர், வேறு சிலர் துன்பம், துயரம் வரும்போது மட்டும் மௌனம் காப்பர், இன்னும் சிலர் கோபத்தை மௌனத்தால் வெளிக்கொணர்வர்.
மௌனம் பொதுவாக பெண்மைக்கு அழகு என்பர். மௌனத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. மௌனம் சில நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. சில நேரம் கஷ்டங்களை தருகின்றது. நமக்கு பிடித்தவர் நம்முடன் பேசாமல் இருந்தால், நம் மனம் படும் பாடு சொல்லி அடங்காது. மௌனம் சில நேரம் மனிதனை கொன்று விடுகிறது.
அமைதியான கடற்கரையில், மௌனம் இனிமையானதாக இருக்கும். இயற்கையை ரசிக்கும் போது மௌனம் சந்தோசத்தை தரும். குழந்தையின் தூக்கத்தை ரசிக்கும் போது மௌனம் இனிமை. வகுப்பறையில் மௌனம் கொடுமை. சண்டையில் மௌனம் சமரசத்திற்கு வழி வகுக்கும்

மௌனத்தை ஓசையற்ற,அடக்கமான,மறைத்து வைத்த,நிசப்தமான, அமைதியான என பல நிலைகளில் உணரலாம். மௌன மொழி, காதலில் அதிகம். மௌனம் தமிழில் அழகான வார்த்தை. நம் வாழ்விலும் மௌனம் முக்கிய பங்காற்ற நாம் முன் வருவோம்.